மயிலாடுதுறை காங். வேட்பாளர் யார்?...அப்டேட் கொடுத்த செல்வப்பெருந்தகை…
மயிலாடுதுறை தொகுதி கேட்டு காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவுவதால் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்.
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இன்று இரவு அறிவிக்கப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம்தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மயிலாடுதுறை தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவுவதால் வேட்பாளரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் வேட்பு மனுதாக்கல் செய்ய நாளையே (மார்ச் 27) கடைசி நாள் என்பதால் மயிலாடுதுறை தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்வதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் யார்? என்பது இன்று (மார்ச் 26) இரவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார். நிறைய பேர் வாய்ப்பு கேட்பதால் யாருக்கு கொடுக்க வேண்டும் என யோசித்து வருவதாக கூறினார். மேலும், தேர்தல் பரப்புரைக்காக ராகுல்காந்தி விரைவில் தமிழ்நாடு வர உள்ளார் எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
What's Your Reaction?