Ilaiyaraaja: இளையராஜாவுக்கு பணத்தின் மீது பேராசை… பிரபல தயாரிப்பாளர் விளாசல்!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் சர்ச்சையான நிலையில், தயாரிப்பாளர் கே ராஜன் இளையராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

May 4, 2024 - 11:39
Ilaiyaraaja: இளையராஜாவுக்கு பணத்தின் மீது பேராசை… பிரபல தயாரிப்பாளர் விளாசல்!

சென்னை: முன்பெல்லாம் இளையராஜா என்றால் அவரது பாடல்கள் தான் நினைவில் வரும். இப்போது இளையராஜா என யாராவது பேச ஆரம்பித்தால், “என்னாச்சு… என்ன சர்ச்சை..” என்றே கேட்கத் தோன்றுகிறது. அந்தளவிற்கு இளையராஜாவை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் வலம் வருகின்றன. தனது உயிர் நண்பன் எஸ்பி பாலசுப்ரமணியனையே, “எனது அனுமதி இல்லாமல் நான் இசையமைத்த பாடல்களை மேடையில் பாடக் கூடாது..” என ஆர்டர் போட்டவர் இளையராஜா.

இந்நிலையில், சமீபத்தில் தனது பாடல்களுக்கு காப்பி ரைட்ஸ் எனப்படும் காப்புரிமை வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து ரஜினியின் கூலி படத்தின் டைட்டில் டீசர், தனது டிஸ்கோ பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாகவும் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல், ஒரு பாடலுக்கு வரிகளை விட இசை தான் முக்கியம் என இளையராஜா பேசியதும் சர்ச்சையானது. இதற்கு வைரமுத்து கவுன்டர் அட்டாக் செய்ய, பதிலுக்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கவிப்பேரரசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். 

இதனால் 24 மணி நேரமும் ட்ரெண்டிங்கில் உள்ளார் இளையராஜா. இந்த சூழலில் தயாரிப்பாளர் கே ராஜன் இளையராஜாவை விமர்சித்துள்ளது வைரலாகி வருகிறது. சென்னையில் நடந்த குற்றம் தவிர் படத்தின் தொடக்க விழாவில் தயாரிப்பாளரும் வினியோகஸ்தர் சங்க தலைவருமான கே.ராஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். ஒரு படத்தின் பாடல் மொத்தமாக இசை என்பதே தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ஏனென்றால் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்து, இயக்குநருடன் பேசி, கதாநாயகனுடன் பேசி, பிறகு இசையமைப்பாளருடன் பேசுகிறோம். இயக்குநர் கதைக்கேற்ற சூழலைச் சொல்லி அதற்கேற்ற மெட்டை இசையமைப்பாளரிடம் இயக்குநர் தான் வாங்குகிறார்.

இயக்குநர் செல்லும் வேலையைத்தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டும். இசையமைப்பாளர் தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது. 10 ட்யூன் வாங்குவோம் சில நேரம் 25 ட்டன் கூட வாங்கித் தேர்ந்தெடுப்போம். கொத்தனார் வீடு கட்டுகிறார். அந்த கொத்தனார் தினசரி கட்டடம் கட்டுகிறார் அவருக்குக் கூலி கொடுத்து விடுகிறோம். கட்டட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது அந்தக் கட்டடம் எனக்குத் தான் சொந்தம் ,நான்தான் கட்டினேன் என்று சொன்னால் எப்படி முட்டாள்தனமாக இருக்குமோ அதைப்போல எங்கள் இசை இசையமைப்பாளருக்குத் தான் சொந்தம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. நாங்கள் அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்துவிட்டோம். அவர் எங்களுக்கு வேலை செய்தார். அது யாரா இருந்தாலும் சரி. இன்று அது வழக்கில் இருக்கிறது எங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம்.

அவர் ஒரு பெரிய இசைஞானி அதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரிய பேராசையின் காரணமாக பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார். அவர் செய்வது அத்தனையும் சரியில்லாதது. பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொந்தம் இல்லையா? இவை அத்தனையும் தவறானது. ஒரு தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம்” என்றார். இளையராஜாவை தயாரிப்பாளர் கே ராஜன் பகிரங்கமாக விமர்சித்துள்ளது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow