தேனியில் கைதான சவுக்கு சங்கர் மீது என்னென்ன வழக்குகள்?.. கோவையில் விபத்து நடந்தது எப்படி?
சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனியில் இருந்து கோவைக்கு சவுக்கு சங்கரை அழைத்து வரும் போது அவரது வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய சங்கர், கடந்த 2008ஆம் ஆண்டு அரசு ஆவணங்களை பொதுவெளியில் கசியவிட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன் பின், ‘சவுக்கு ஆன்லைன்’ என்ற இணையப்பக்கம் தொடங்கி, அதில் தமிழக அரசு குறித்து கடுமையான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் யூடியூப் சேனல்களில் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசி பிரபலமான சவுக்கு சங்கர், தமிழக அரசு குறித்தும் நீதித்துறை குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார். அப்போது, நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை 6 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
6 மாத சிறைவாசத்திற்கு பின் வெளியே வந்த சவுக்கு சங்கர், யூடியூப் சேனல்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் தொடர்பாக அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தேனியில் இருந்த சவுக்கு சங்கரை, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக கோவைக்கு அழைத்து சென்றனர்.
சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 294(b)- ஆபாசமாக பேசுதல் 509- பெண்களை இழிவாக பேசுதல், 353- அரசு ஊழியரை இழிவாக பேசுதல் மற்றும் 4- பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம். 67 தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வந்த வழியில் தாராபுரம் அருகே சவுக்கு சங்கரை அழைத்து வந்த காவல் துறை வாகனம் விபத்துக்குள்ளானது. சிறிய காயத்துடன் அவரை மாற்று வாகனத்தில் காவல்துறையினர் அழைத்து வருகின்றனர். இதனிடையே கோவை சைபர் கிரைம் காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படும் சவுக்கு சங்கரை விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் சைபர் கிரைம் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
What's Your Reaction?