நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்துக்கொலை? .. பரபர விசாரணை

திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபி ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அவர் மாயமானதாக அவரது மகன் புகார் அளித்த நிலையில், உவரி போலீசார் ஜெயக்குமாரின் உடலை மீட்டுள்ளனர்.

May 4, 2024 - 12:21
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்துக்கொலை? .. பரபர விசாரணை


நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் கேபி ஜெயக்குமார். திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கேபி ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜாஃப்ரின் நேற்று மாலை நெல்லை மாவட்டம் உவரி காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என்று புகாரளித்துள்ளார். அவர் தனது புகாரில், கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கேபி ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். 

இது தொடர்பாக பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலரிடம் கேபி ஜெயக்குமார் ஒரு புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார். அதில், வீட்டு முன்பு சில நபர்கள் சுற்றி வருகிறார்கள். வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காக சுற்றி வருகிறார்கள் என நினைத்தோம்.

ஆனால், கொலை மிரட்டல் நோக்கத்துடன் திட்டமிட்டு சுற்றி வருவதாகவும் சில நபர்களின் பெயரை பட்டியலிட்டும் கேபி ஜெயக்குமார் புகார் அளித்து இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தான் இரண்டு நாட்களாக கேபி ஜெயக்குமாரை காணவில்லை என்று அவரது மகன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 

கேபி ஜெயக்குமார் மாயமானதாக வெளியான தகவல் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் உவரி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்தது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக நெல்லை எஸ்.பி தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow