சாம்சங் தொழிலாளர்களை வீடு புகுந்து கைது செய்யவில்லை - தங்கம் தென்னரசு விளக்கம்
ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தும் சாம்சங் நிறுவன ஊழியர்கள் மீது அடக்குமுறை செலுத்தியதாக எழுந்த சர்ச்சைக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருக்கிறார்.
ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 25 நாட்களுக்கும் மேலாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. போராட்டம் நடத்தி வருகிற சாம்சங் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாகத் அரசுத் தரப்பில் இருந்து தகவல் வெளியான நிலையில் போராட்டக்குழுவினர் இதனை முழுமையாக மறுத்திருக்கின்றனர். இன்னும் போராட்டம் தொடர்ந்து வருகிற நிலையில் காவல் துறையினரால் சாம்சங் ஊழியர்கள் வீடு புகுந்து கைது செய்யப்படுவதாகவும், போராட்டக் குடில் அகற்றி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மாநில அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் சாம்சங் நிறுவன ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்...
* 3 அமைச்சர்கள் கொண்ட குழுவினரால் பேச்சு வார்த்தை நடத்தப்படவே அப்பேச்சுவார்த்தையின் முடிவில் சாம்சங் நிறுவனம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க முன்வந்துள்ளது.
* சாம்சங் பணியாளர்களின் நலனைக் கருதி, பேச்சு வார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் மிக முக்கியமான கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்களோடு பேசி ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.
* சம்பளத்துடன் சிறப்பு மாதத் தொகையாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் அக்டோபர் முதல் தேதியில் இருந்து கூடுதலாக வழங்கப்படும், தொழில் நேரத்தில் இறந்துவிட்டால் சிறப்புத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும், குளிரூட்டும் பேருந்துகள், மருத்துவ வசதி, ஓய்வு அறை வசதி, குடும்ப நிகழ்வு விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் நிறைவேற்றி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
* சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சி.ஐ.டி.யு அமைப்பு இந்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசின் சார்பாக மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
* நேற்று நடந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கச் சென்ற பொழுது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில்தான் கைது செய்யப்பட்டனர். வீடு புகுந்து தொழிலாளர்களை கைது செய்யவில்லை.
* தொழிற்சங்கம் பதிவு செய்வதற்கு கோரிக்கை முன் வைத்துள்ளார்கள் சாம்சங் நிறுவனம் அதற்கு எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கான விளக்கத்தையும் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
* 38000 கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாடு முதலீடுகளை ஈர்க்கும் மாநிலம் என்பதால் இந்தப் பிரச்னையை அரசியலாகப் பார்க்க வேண்டாம். தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்கக் கூடிய அரசாகத்தான் திமுக அரசு செயல்படுகிறது. மேலும், தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறது.
* சிஐடியு வை நாங்கள் விரோத மனப்பான்மையோடு பார்க்கவில்லை. தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்கிற அவர்களது கோரிக்கை நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்துதான் முடிவெடுக்க முடியும்.
* பேச்சு வார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க முனைகிறோம். தொழிலாளர்கள் மீது எந்த அடக்குமுறையும் செலுத்தவில்லை. இது போன்ற சூழலில் அதனைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்யுமோ அதனைத்தான் செய்கிறோம்” என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?