சாம்சங் ஊழியர்கள் மீது அடக்குமுறை செலுத்தும் திமுக - எடப்பாடி கண்டனம்

ஊதிய உயர்வு முதலிய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் சாம்சங் நிறுவன ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

Oct 9, 2024 - 13:25
சாம்சங் ஊழியர்கள் மீது அடக்குமுறை செலுத்தும் திமுக - எடப்பாடி கண்டனம்
edappadi palanisamy

சென்னை அருகே உள்ள திருப்பெரும்புதூரில் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 25 நாட்களுக்கும் மேலாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. போராட்டம் நடத்தி வருகிற சாம்சங் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாகத் அரசுத் தரப்பில் இருந்து தகவல் வெளியான நிலையில் போராட்டக்குழுவினர் இதனை முழுமையாக மறுத்திருக்கின்றனர். இன்னும் போராட்டம் தொடர்ந்து வருகிற நிலையில் காவல் துறையினரால் சாம்சங் ஊழியர்கள் வீடு புகுந்து கைது செய்யப்படுவதாகவும், போராட்டக் குடில் அகற்றி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, போராட்டக் குழுவினர் மீதான அடக்குமுறைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளளர் - நிறுவனம் - அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா தி.மு.க அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்? போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow