தங்கம் தென்னரசு, ஓ.பி.எஸ்., கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து, வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூன்று பேரின் வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.
கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்த காலக் கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவரது மனைவி உட்பட மூவர் மீது ரூ.44.56 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார்.
இதேபோல, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து, வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை துவங்கியது.
மூன்று வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்தன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.
What's Your Reaction?