வீக் எண்ட் லீவு.. சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு போறீங்களா.. அரசு குஷியான அறிவிப்பு
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர பகுதிகளுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னைக்கு வேலைக்காகவும் படிக்கவும் வந்திருப்பவர்கள் பலரும் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். தற்போது பண்டிகை நாட்களில் மட்டுமல்லாது வார விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது வார விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு முதல் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 265 பேருந்துகள் இயக்கப்படும்.
ஏப்ரல் 6ம் தேதி தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 350 பேருந்துகளும் இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன், ஏப்ரல் 5, 6 ஆகிய தேதிகளில் முறையே கூடுதலாக தலா 55 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
What's Your Reaction?