குப்பைக் கிடங்கில் 2 நாட்களாக எரியும் தீ... காற்று மாசால் மூச்சு விடமுடியாமல் திணறும் மக்கள்...
கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் பரவிய தீயால் ஏற்பட்ட புகைமண்டலம் காரணமாக காற்று மாசடைந்து, அப்பகுதி மக்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டு வருகிறார்கள்.
கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில் நாள்தோறும் 1,300 டன் குப்பைகள் சேகரிப்படுகின்றன. இவை அனைத்துமே வெள்ளூரில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மை மூலமாக குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, காற்றின் வேகத்தில் தீ மளமளவென வேகமாகப் பரவியது. 150 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் சுமார் 10 ஏக்கரில் தீ பரவியது. இதனை கட்டுப்படுத்த கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 15 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தீ பரவும் திசையை கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இரண்டு நாள் போராட்டத்திற்குப் பிறகு தற்போது தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் கூறுகின்றனர். எனினும் தொடர்ந்து கரும்புகை அப்பகுதி முழுவதுமே சூழ்ந்துள்ளது. இதனால் காற்றின் தரம் புகை காரணமாக மோசம் அடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
காற்றின் தரக் குறியீடு 0-50 என்ற அளவில் இருந்தால்தான் அது சுவாசிக்க சுத்தமான காற்று. வெள்ளலூர் சுற்றுப்பதிகளில் காற்றின் தரக் குறியீடு நேற்று 170 தாண்டி இருந்தது. குப்பைக் கிடங்கை ஒட்டி இருக்கும் மகாலிங்கபுரம், கோண வாய்க்கால் பாளையம், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் காற்றின் மாசு அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் சுவாச பிரச்சனையால் சிக்கித் தவித்து வருகின்றனர். இன்று மதியத்திற்குள் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறினார்கள்.
What's Your Reaction?