Kalaingar Birthday: ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் வரை... தமிழ் சினிமாவில் கலைஞர்!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதே படைப்பாளர்கள் அனைவருக்குமான பெருங்கனவு. ஆனால், தமிழையே மாபெரும் அடையாளமாக மாற்றி தன்னையும் தனது சினிமா பயணத்தையும் உச்சம் கொண்டு சென்ற பெருமை கலைஞரை மட்டுமே சேரும்.
சென்னை: ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் வரை நீண்ட நெடும் சாதனை பயணத்தை தனதாக்கியவர் கலைஞர். ராஜகுமாரி படத்தில் வசன உதவியாளராக வேலை பார்க்கச் சென்ற கலைஞர், தனது மொழி ஆளுமையால் படத்தின் மொத்த வசனத்தையும் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். ராஜகுமாரி படத்தில் கலைஞரின் கூர் தீட்டிய வசனங்கள் கர்ஜிக்க வைத்தது என்றால், எம்ஜிஆர் தனது அசுர வாள் வீச்சு திறமையால் ரசிகர்களை வசீகரித்தார். ஆனாலும், ராஜகுமாரி படத்தின் டைட்டில் கார்டில் கலைஞரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
ராஜகுமாரியை தொடர்ந்து அபிமன்யூ படத்திற்காக வசனம் எழுதினார் கலைஞர், இந்தப் படத்திலும் எம்ஜிஆர் தான் ஹீரோ. எம்ஜிஆர் நடிப்பில் புராண கதை பின்னணியில் உருவான அபிமன்யூ படத்துக்கு, இலக்கிய நயத்தோடு வசனம் எழுதினார் கலைஞர். திரை வசனங்களில் இப்படியொரு புதுமையை கண்டிடாத ரசிகர்கள், அபிமன்யூ படத்தை கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் இங்கேயும் கலைஞருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் துவண்டு போன கலைஞர் மீண்டும் மந்திரகுமாரி திரைப்படம் மூலம் பெரும் எழுச்சிக் கண்டார். அதேஆண்டு கலைஞர் வசனத்தில், எம்ஜிஆர் நடித்த மருதநாட்டு இளவரசி திரைப்படமும் இக்கூட்டணிக்கு மணி மகுடமாக அமைந்தது.
தமிழ்த் திரையுலகில் அப்போது ஆழமாக பதிந்த கலைஞரின் பெயர், இன்றளவும் எட்டா உயரத்தில் ஒரு விண் கல்லைப் போன்று ஜொலித்துக் கொண்டே இருக்கிறது. அடுக்கு மொழி, காவியத் தமிழ், இலக்கிய நடை, பகுத்தறிவு கர்ஜனை என கலைஞரின் வசனங்களில் இருந்த அபரிதமான வீச்சில் தமிழ்த் திரையுலகம் தலை நிமிர்ந்தது. கலைஞரின் வசனத்தில் நடித்துவிட வேண்டும் என்பது நடிகர்களின் பெரும் லட்சியமாக மாறியது. உச்சக்கட்டமாக பராசக்தி படத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்காக கலைஞர் எழுதிய வசனங்களில் அனல் தெறித்தது. வளம் கொண்ட வசனப் புரட்சியால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ராஜசிம்மாசனமிட்டு கம்பீரமாக அமர்ந்தார் கலைஞர்.
காதல், நட்பு, பரிவு, பாசம், துரோகம், வீரம், வன்மம், எள்ளல், துள்ளல், கலை நயம், அரசியல், பகுத்தறிவு, ஆர்ப்பாட்டம், கொண்டாட்டம் என, கலைஞரின் வசனங்களில் நவரசங்கள் கூட வீழ்ந்து கிடந்தன. ஆனால், இப்போதும் வரையிலும் வீழாமல் தலை நிமிர்ந்து கர்ஜிப்பது கலைஞரின் வசனங்கள் மட்டுமே. அரை நூற்றாண்டுக்கும் மேலாக திரையுலகில் உதய சூரியனாக சுடர் விட்ட கலைஞர், 75 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமஸ்கிருத சம்பாஷனைகளில் கட்டுண்டு கிடந்த தமிழ் சினிமாவை; தான் கற்றறிந்த தமிழ் மொழியை கொண்டே மீட்டெடுக்க பேரறிஞர் அண்ணா முன்னுரை எழுதினார் என்றால், கலைஞர் அதனை அடர்த்திப் பெற செய்தார்.
What's Your Reaction?