Vettaiyan Release Date: வேட்டையன் ரிலீஸ் தேதி... இமயமலையில் இருந்து ரஜினி கொடுத்த தெறிமாஸ் அப்டேட்!
இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் கொடுத்துள்ளார்.
சென்னை: ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் கமிட்டானார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். முதலில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் ஹீரோவாக நடித்தார் ரஜினிகாந்த். இதில் சூப்பர் ஸ்டாருடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். வேட்டையன் படத்தின் ஷூட்டிங் சில வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது.
இமயமலையில் ரஜினி
இதனையடுத்து துபாய், அபிதாபி நாடுகளுக்கு டூர் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி, தற்போது அவரது ஃபேவரைட் ஸ்பாட்டான இமயமலையில் ரவுண்ட் அடித்து வருகிறார். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இன்னும் ஓரிரு தினங்கள் இமயமலையில் இருக்கும் ரஜினிகாந்த், அடுத்த வாரத்திற்குள் சென்னை திரும்புவார் என சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கூலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கூலி ஷூட்டிங் தொடங்கும் தேதி மட்டுமின்றி, வேட்டையன் ரிலீஸ் தேதி பற்றியும் அப்பேட் கொடுத்துள்ளார்.
வேட்டையன் ரிலீஸ் தேதி
அதன்படி தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. தசரா விடுமுறையை முன்னிட்டு வேட்டையனை களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளது. முன்னதாக வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால், தேதியை மட்டும் படக்குழு தெரிவிக்கவில்லை. இப்போதும் படக்குழு தரப்பில் ரிலீஸ் தேதி அக்டோபர் 10 என சொல்லப்படவில்லை என்றாலும், ரஜினி பேசிய வீடியோ மூலம் இது தெரியவந்துள்ளது. இமயமலையில் தனது நண்பர்கள், குருஜீ ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த ரஜினி, வேட்டையன் ரிலீஸ் தேதி அக்டோபர் 10ம் தேதி என்பதை கன்ஃபார்ம் செய்துள்ளார்.
கூலி படப்பிடிப்பு
அதேபோல், கூலி படத்தின் ஷூட்டிங் வரும் 10ம் தேதி தொடங்கும் என்பதையும் அந்த வீடியோவில் ரஜினி கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதேபோல், கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்கவிருப்பதை சத்யராஜ் சமீபத்தில் உறுதி செய்திருந்தார். ரஜினி, சத்யராஜ் தவிர கூலி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றி இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் ஜூன் 10ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் போது அபிஸியலாக அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?