கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்.. நேரில் போன எடப்பாடி பழனிச்சாமி.. சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கு

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் துயரத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

Jun 20, 2024 - 12:06
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்.. நேரில் போன எடப்பாடி பழனிச்சாமி.. சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக 4  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாடு அரசும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் இருவரும் கள்ளக்குறிச்சி சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ள நிலையில் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தனது விசாரணையை தொடங்கியுள்ளார். 


இதனிடையே இன்று சட்டசபை தொடங்கிய நிலையில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அதிமுக சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.

ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார். 

இதனிடையே கள்ளக்குறிச்சிக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. 


கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக முறையிட்டதை அடுத்து, நாளை வழக்கை விசாரணைக்கு  எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டோர் பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்தனர்.

அப்போது அவர்கள், விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
விஷச் சாராய விற்பனை உள்ளாட்சி அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடக்காது என்பதால், அவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தமிழக அரசுத்தரப்பில்  வழக்கறிஞர் முனியப்பராஜ், விஷ சாராய விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மதுவிலக்கு துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதிகள், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow