கள்ளச்சாராய உயிரிழப்பு: சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்... அதிமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை!
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக-மார்க்சிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் வழங்கியுள்ளன.
கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.
இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 84 பேர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் 30 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 35 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 9 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ள நிலையில், கள்ளச்சாராயத்துக்கு 35 பேர் உயிரிழந்தது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு என்றும் இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும் 'கள்ளச்சாராய உயிரிழப்புக்கு அரசின் நிர்வாக அலட்சியமே முக்கிய காரணம்' என்று நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதற்காக சபாநாயகர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், அதிமுக, பாஜக என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தனர்.
கூட்டம் தொடங்கியதும் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதேபோல் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உயிழந்தவர்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உள்பட சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் 1 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்பு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாகவும், மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாகவும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் வழங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை குழு தலைவர் நாகை மாலி இதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார்.
இதேபோல் அதிமுகவும், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கவும், கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவும் கடிதம் வழங்கியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சட்டப்பேரவையில் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?