கள்ளச்சாராய உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம்; ஒரு நபர் விசாரணை ஆணையம் - முதல்வர் ஸ்டாலின்!
9 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ள நிலையில், கள்ளச்சாராயத்துக்கு 35 பேர் உயிரிழந்தது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.
இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 84 பேர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் 30 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 35 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 9 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ள நிலையில், கள்ளச்சாராயத்துக்கு 35 பேர் உயிரிழந்தது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு என்றும் இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, முத்துசாமி , தமிழ்நாடு டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்ளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதுடன், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியனை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தேன்.
இன்று அமைச்சர் உதயநிதியும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மெத்தனால் வழங்கியவர்களையும் கண்டறிந்து நடடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததுடன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இது குறித்து சிபிஐடி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000மும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், மெத்தனால் கலந்த சாராயம் உற்பத்தி செய்தவர்கள் மீதும், விற்பனை செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விஷச்சாராய உற்பத்திக்கு காரணமான மெத்தனால் எங்கு இருந்து வருகிறது என்பதையும் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
உள்துறை முதன்மை செயலாளர், காவல்துறை இயக்குநர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை 2 நாட்களில் வழங்குவார்கள்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு, இதற்கான அனைத்து காரணங்களையும் கண்டறிந்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுளேன். இவ்வாறு முதலவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
What's Your Reaction?