Kamal Hassan: உத்தம வில்லன் பஞ்சாயத்து… சைலண்டாக கிளம்பிய கமல்ஹாசன்!

உத்தம வில்லன் பட பிரச்சினையில் கமல் மீது இயக்குநர் லிங்குசாமி புகார் கூறியிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து கமல் கொடுத்த ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது.

May 7, 2024 - 18:05
Kamal Hassan: உத்தம வில்லன் பஞ்சாயத்து… சைலண்டாக கிளம்பிய கமல்ஹாசன்!

சென்னை: மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். நாயகனுக்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு நடிக்கவுள்ள நிலையில், அதன் ப்ரோமோ வீடியோ நாளை வெளியாகிறது. இதனிடையே தக் லைஃப் படப்பிடிப்புக்காக டெல்லி சென்றிருந்த கமல், தற்போது சென்னை திரும்பினார்.  

விமானம் மூலம் சென்னை வந்தடைந்த கமல்ஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதன்படி தக் லைஃப் திரைப்படம் அடுத்தாண்டு ரிலீஸாகும் என்றவர், இந்தியன் 2 ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகும் எனக் கூறினார். அப்போது அவரிடம் உத்தம வில்லன் பட விவகாரத்தில் லிங்குசாமி புகார் தெரிவித்தது குறித்து கேட்கப்பட்டது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த உத்தம வில்லன் திரைப்படம் 2015ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் பேனரில் தயாரித்திருந்தார்.  

ரமேஷ் அரவிந்த் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. அதேபோல், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. இதனால் உத்தம வில்லன் படத்தால் இயக்குநர் லிங்குசாமிக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதுபற்றி ஏற்கனவே பல பேட்டிகளில் விளக்கமளித்துள்ளார் லிங்குசாமி. அப்போதெல்லாம் கமல் நடிப்பில் உத்தம வில்லன் படத்தை தயாரித்ததில் தனக்கு பெருமையே எனக் கூறியிருந்தார். அதேநேரம் பாக்ஸ் ஆபிஸில் ஏற்பட்ட நஷ்டம் குறித்து அதிகம் பேசியது கிடையாது.  

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் உத்தம வில்லன் பட விவகாரத்தில் கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார் லிங்குசாமி. அதில், “கமல்ஹாசனை வைத்து எங்களது திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த உத்தமவில்லன் தோல்வி அடைந்தது. அப்போது ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட 30 கோடியில் இன்னொரு படத்தில் நடித்து தருவதாக கமல்ஹாசன் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்திருந்தார். ஆனால் 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை படம் நடித்து தரவில்லை. எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். எனவே தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி கமல் கால்ஷீட் பெற்றுத் தர வேண்டும்'' என குறிப்பிட்டிருந்தார்.  

இந்த புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், அதற்கு பதில் சொல்லாமல் தனது காரில் ஏறிச் சென்றார் கமல். விக்ரம் வெற்றிக்குப் பின்னர் கமல்ஹாசனின் மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி 2898 AD, தக் லைஃப் என அடுத்தடுத்து படங்களில் பிஸியாகிவிட்டார். இந்த சூழலில் திடீரென லிங்குசாமி கமல் மீது புகார் கொடுத்ததும், அதற்கு உலக நாயகன் ரியாக்‌ஷனே கொடுக்காமல் எஸ்கேப் ஆனதும் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow