தண்ணி வண்டியால் பஞ்சாயத்து.. மோதல் To சாதி தகராறு.. கொலையில் முடிந்த கொடூரம்
நிலக்கோட்டை அருகே பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்ட விவகாரம் இறுதியில், இரு சமூக மக்களிடையே பிரச்னையாக மாறி, கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கரியாம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், நடுப்பட்டியை சேர்ந்தவர் வேலு. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும், கட்டிட ஒப்பந்ததாரரான கிருஷ்ணன் என்பவரிடம் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடுப்பட்டியில் கட்டிடப் பணிக்காக டேங்கர் லாரி மூலம் இருவரும் தண்ணீர் கொண்டு சென்றபோது, வேலுவின் உறவினர் பெண்ணிடம் சக்திவேல் செல்போன் நம்பர் கேட்டதாக தெரிகிறது. இதை தெரிந்துகொண்ட வேலு, இது பற்றி அவர்களது ஓனர் கிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சக்திவேல், வேலுவை நைசாக பேசி, மதுகுடிக்க காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வேலுவை, சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து தாக்கியதாக தெரிகிறது.
அங்கிருந்து தப்பி ஓடிய வேலு, அவரது உறவினர்களிடம் தெரிவிக்க, சக்திவேல் கும்பலுக்கும், வேலுவின் உறவினர்களுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது சக்திவேல் தரப்பு இரும்புக்கம்பியால் தாக்கியதில் எதிர்தரப்பினர் அழகுபாண்டி என்பவரின் மண்டை உடைந்து மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வேலுவின் ஊரான நடுப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆண்டார் என்பவர் வீட்டின் முன்பு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல், ஆண்டாரை சரமாரியாக வெட்டி, தலையை அறுத்து துண்டித்து கொலை செய்துள்ளனர்.
இந்த படுகொலை சம்பவத்தால் நடுப்பட்டி முழுவதும் பதற்றம் நிலவியதால் அங்கு பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்கப் போய், அது நண்பர்களுக்குள் தகராறாக மாறி, அடுத்து ஊர் மக்கள், இருவேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலாக உருவாகி, கடைசியில் கொலையில் முடிந்துள்ளது நிலக்கோட்டை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?