தெய்வீக ராகம் இசைத்த ஜென்ஸி.. இசை வானில் ஒரே வெண்ணிலா... இன்னிசை இளவரசிக்கு இன்று பிறந்தநாள்

தெய்வீக ராகம் என்பார்களே அது சாட்சாத் நம்ம ஜென்ஸிதான்.. இன்று அவருக்கு பிறந்த நாள்.. காற்றில் வருடும் இந்த இன்னிசை இளவரசிக்கு இன்று பிறந்தநாள். குமுதம் இணையதளம் சார்பாக பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

May 13, 2024 - 16:23
தெய்வீக ராகம் இசைத்த ஜென்ஸி..  இசை வானில் ஒரே வெண்ணிலா... இன்னிசை இளவரசிக்கு இன்று பிறந்தநாள்

தமிழ் திரை இசையுலகில் எத்தனையே பாடகிகள் தங்களின் இனிமையான குரலால் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்திருக்கும். ஆனால் காலங்கள் கடந்தும் இசை ரசிகளின் காதுகளில் தேனருவியை பாய்ச்சி வருகிறார் ஜென்ஸி. தமிழ் திரை உலகத்தை விட்டு அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தாலும அவர் பாடிய பாடல்கள் இன்றைக்கும் தெய்வீக ராகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. 

கேரளாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜென்ஸி தனது 13 வயதிலேயே பாடத் தொடங்கி விட்டார். ஜென்சியை தமிழகத்துக்கு அழைத்து வந்தது பிரபல பாடகர் ஜேசுதாஸ்தான். 16ஆவது வயதில் இளையராஜாவிடம் ஜென்ஸியை அறிமுகம் செய்து வைத்தார் ஜேசுதாஸ். அவரது அறிமுகம் என்றைக்கும் சோடை போகாது என்று இளையராஜாவிற்கு தெரியும். 1978 முதல் 1982 வரை 4 ஆண்டுகளில் தனது தேன் குரலில் அவர் பாடியது மொத்தம் 50 பாடல்கள்தான். 

முள்ளும் மலரும் படத்தில்"அடி பெண்ணே" என்பது இவர் பாடிய 2வது பாடல்.. எடுத்த எடுப்பிலேயே இந்த பாடல் தமிழக மக்களின் இதயங்களில் ஆழமாக வந்து ஒட்டிக் கொண்டது.. 

 கிழக்கே போகும் ரயில் படத்தில் ஜென்ஸியின் குரலில் மயங்கிப்போன இயக்குநர் பாரதிராஜா அவரது ரசிகரானார். தொடர்ந்து வந்த தனது எல்லாப் படங்களிலும் ஜென்ஸியின் குரலில் ஒரு பாடலை பதிவு செய்தார்.

நிறம் மாறாத பூக்கள் படத்தில் ஆயிரம் மலர்களே மலருங்கள்... பாடலில் பலரது மனங்களை மலர வைத்திருப்பார்."இரு பறவைகள் மலை முழுவதும்" பாடலில் "எங்கெங்கு அவர் போல நான் காண்கிறேன்" என்ற வரிகளில் காதலின் அன்னியோன்யமும், புரிதலும் மேலோங்கி தழைப்பதை நம்மால் உணர முடியும்!!

உல்லாசப்பறவைகள்     படத்தில் அவர் வாணி ஜெயராமுடன் இணைந்து பாடிய தெய்வீக ராகம் இன்றைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. என் உயிர் நீதானே.. என்று பிரியா படத்தில் பாடியது பலரது உயிரில் கலந்தது. 

கரும்பு வில் படத்தில் மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் என்று பாடி அசத்தியிருப்பார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்று பாடி இசை ரசிகளின் நெஞ்சங்களில் இன்னிசை இளவரசியாக கலந்து விட்டார்.

தமிழ் திரை உலகில் சுசிலா, ஜானகி ஆகிய 2 இசை புயல்களுக்கு நடுவே தென்றலாய் வீசினார் ஜென்ஸி. 4 ஆண்டுகளில் அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் ரசிகர்களின் நெஞ்சங்களில் இசை ராகத்தை பரப்பிக்கொண்டிருக்கிறது. 

புகழின் உச்சியில் இருந்த நேரம் கேரளாவில் ஒரு அரசு பள்ளியில் இசை ஆசிரியர் பணி கிடைக்கவே தனது திரை இசை பயணத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். ரசிகர்கள் பலர் தடுத்தும் குடும்பத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக இசை ஆசிரியை பணியை ஏற்றுக்கொண்டார் ஜென்ஸி. 

அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவர் பாடிய "காதல் ஓவியம், பாடும் காவியம்" என்ற பாடல் இன்றைக்கும் பல காதலர்களின் தேசிய கீதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.  அரசு உதவி பெறும் பள்ளியில் இசை ஆசிரியராக கிடைத்த வேலையை முழு மனதோட செய்தேன்.. ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இசையை கற்று தந்தேன் என்று மன திருப்தியோடு கூறியிருக்கிறார் ஜென்ஸி.

இவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ரசிகர்கள் இவர் பாடிய பாடல்களை பதிவிட்டு மறக்காமல் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேன் குரலால் இசையை அள்ளி அள்ளி தந்த ஜென்ஸி, நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுதலாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow