'கிராமத்து மண் வாசனை'.. சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லதுரை' டீசர் வெளியீடு!
'கோழிப்பண்ணை செல்லதுரை'க்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 1.18 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர் அப்படியே கிராமத்து மண் வாசனையுடன் உள்ளது.
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சீனு ராமசாமி. எளிய மக்களின் கதைகளை எதார்த்தமாக திரைப்படம் வாயிலாக படம் பிடித்து காட்டுவதில் சீனு ராமசாமி பெயர் பெற்றவர். இவர் இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப் பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பு பெற்றன.
விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் இந்த படங்கள் வெற்றி பெற்றன. குறிப்பாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் விமர்சனரீதியாக வெற்றி பெற்றதுடன், வெளிநாட்டு திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளையும் அள்ளியது. 'மாமனிதன்' வெற்றியால் உற்சாகம் அடைந்த சீனு ராமசாமி, 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகை பிரிகிடா சகா மற்றும் நடிகர் ஏகன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரிகிடா சகா 'இரவின் நிழல்' படத்தில் நடித்து இருந்தார். ஏகன் 'கனா காணும் காலங்கள்' வெப் தொடரில் நடித்து புகழ்பெற்றவர். 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்துக்கு என்.ஆர் ரகுநாதன் இசையமைத்துள்ளார். 'விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன்' இந்த படத்தை தயாரித்துள்ளது.
'கோழிப்பண்ணை செல்லதுரை'க்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 1.18 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர் அப்படியே கிராமத்து மண் வாசனையுடன் உள்ளது. மலைப்பகுதியின் அழகிய பின்னணி காட்சியுடன் ''இங்கு ஓடுறவன், ஓடிட்டுதான் டா இருக்கணும். ஆனா வாழ்க்கையில் யாருக்காக ஓடுறோம்னு தெரிஞ்சிக்கணும்முல்ல. உனக்காக நீ எப்பதான் டா ஓடப்போற'' என்று யோகி பாபு, ஏகனிடம் பேசும் டயலாக்குடன் டீசர் தொடங்குகிறது.
நாயகன் ஏகன் மற்றும் நாயகி பிரிகிடா சகா இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவது டீசரில் பார்க்க முடிகிறது. குறிப்பாக ''எனக்கு ஆத்தா கிடையாது. அப்பன் கிடையாது. ரெண்டும் சேர்ந்த உறவா நீதான் யா இருக்க'' என்று டயலாக் பேசும் ஏகன் நடிப்பில் உருக வைக்கிறார். ''பொன்னான பொட்டப்புள்ள, பொத்திப் பொத்தி வளர்த்த புள்ள.. ஊரை விட்டு போகயில உசுர் முட்டுதே..'' என்ற பாடல் வரிகளுடன் டீசர் முடிவடைகிறது.
என்.ஆர் ரகுநாதனின் பின்னணி இசை மனதை உருக வைக்கிறது. ஒளிப்பதிவு கிராமத்தின் அழகிய காட்சிகளை நம்முள் கடத்துகிறது. 'கோழிப்பண்ணை செல்லதுரை' டீசரை பார்க்கும்போது, படம் மிகவும் எதார்த்தமாக இருக்கும் என்பது தெளிவாகிறது. மொத்தத்தில் இந்த படம் சீனு ராமசாமிக்கு மேலும் ஒரு பிளாக் பஸ்டராக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
What's Your Reaction?