தளபதி திருவிழா மலேஷியாவில் இருந்து நேரடி ரிப்போர்ட்

மலேசியாவிலிருந்து எஸ்.பி.அண்ணாமலை

தளபதி திருவிழா மலேஷியாவில் இருந்து நேரடி ரிப்போர்ட்
Live report from the Thalapathy thiruvizha Malaysia

ஒட்டுமொத்த திரை உலகமும் திரண்டு போய் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நடத்திய கலை விழாக்களுக்கெல்லாம் கூடாத கூட்டம் ‘தளபதி திருவிழா’ என்ற பெயரில் விஜய் என்ற ஒற்றை நடிகருக்கு மலேசியாவில் கூடியிருக்கிறது என்றால் இது ஒரு சாதாரண நிகழ்வல்ல, சம்திங் ஸ்பெஷல். மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் அகில உலகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி விட்டது. 

ஒரு ஆடியோ ரிலீஸ் பங்ஷனுக்கு ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் மலேசியாவிற்கு பிளைட் பிடித்து போகிறார்கள் என்றால் அது அந்த நிகழ்ச்சிக்காக அல்ல; அந்த நிகழ்வின் நாயகனுக்காக மட்டுமே இருக்க முடியும். 

விஜய்க்காக இப்படி ஒரு கூட்டம் திடீரென எங்கிருந்து முளைத்து வந்தது என்று அரசியல், சினிமா விமர்சகர்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம் மூளையை கசக்கிக் கொண்டிருக்க, அங்கே நடப்பது என்ன என்பதை தெரிந்து கொள்ள  நான்கு நாள் முன்பே நாம் தளபதி திருவிழா நடக்கும் மலேசியாவிற்கே சென்றோம்...

விழா நடப்பதற்கு மூன்று நாள் முன்பிருந்தே கோலாலம்பூர் விமான நிலையம் கோயம்பேடு பஸ் நிலையமாக மாறியிருந்தது. அவ்வளவு கூட்டம். தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தபடி இருந்தனர்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தால் டாக்ஸிகளுக்கு ஏகப்பட்ட டிமாண்ட். அவர்கள் கேட்காவிட்டாலும் ரசிகர்கள் இரண்டு மடங்கு கட்டணங்களை கொடுக்க தயாரக இருந்தனர். தங்குவதற்கு ஹோட்டல்களில் இடம் கிடைக்காமல் பலர் தவித்துக் கொண்டிருந்தனர்.தமிழ்நாட்டு உணவுகளுக்கு தட்டுப்பாடு.  விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.

பிரபல சுற்றுலா தலங்களான கே. எல். மால், பெட்ரோனாஸ் டவர், கேமரூன் ஹைலேண்ட்ஸ் போன்ற இடங்களை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் எங்கு பார்த்தாலும் நீண்ட வரிசைகள்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் மத்தியானம் பகுதியான பிரிட்ஜ் பெயிண்ட் ஏரியாவில் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். அங்கு திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள், டிஜிட்டல் போர்டுகள்...  அதில் விஜய் விழா பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. அதை பார்த்த மலேசியா வாழ் சீன மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு ஆச்சரியம்.

தளபதி திருவிழா நடந்த புகிட் ஜலில் தேசிய கால்பந்து ஸ்டேடியம் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமரும் வசதியை கொண்டது. பின்னணி பாடகர்கள் ஹரிஷ் ராகவேந்திரா க்ரிஷ் மற்றும் அனுராதா ஸ்ரீராம் ஸ்டேடியத்தில் நடைபெறும் முன்னேற்பாடுகளை படம் பிடித்து ரசிகர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இயக்குனர்கள் அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர்கள் நாசர், சிம்பு நடிகைகள் சிம்ரன் ஆண்ட்ரியாவுடன் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா காலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வந்து இறங்கினர்.

நிகழ்ச்சி ஆரம்பித்த நான்கு மணிக்கே 70 ஆயிரம் இருக்கைகள் நிரம்பி விட்டன. மலேசிய புக் ஆஃப் ரெகார்டிஸ் இல் இது பதிவு செய்யப்பட்டு பின்னர் மேடையில் அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. எல்லா ரசிகர்களின் கைகளிலும் கைகடிகாரம் போன்ற ஒன்று அணிந்திருப்பதை பார்க்க முடிந்தது. பளீரென ஒளிரும் தன்மையுள்ள அது ரசிகர்களுக்கு  இலவசமாக வழங்கப்பட்டது. இரவு நேரத்தில் அரங்கமே ஒளிரும் வண்ணம் இருக்கத்தான் அந்த ஏற்பாடு.நீல நிற பிளேசரில் விஜய் மேடைக்கு வந்த போது ரசிகர்கள் எழுப்பிய உற்சாக குரலில் கோலாலம்பூரே குலுங்கியது.

அரங்கத்தில் மஞ்சள் சிவப்பு வண்ணங்கள் அரிதாக கண்ணில் பட்டது. கட்சி கொடிகள் நம் கண்ணில் படவே இல்லை. காரணம் மஞ்சள் சிவப்பு வண்ண ஆடைகள் அணிந்து வரக் கூடாது, கட்சிக் கொடியை எடுத்து வரக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அரசியல் அல்லாத பொழுதுபோக்கு விழாவாக அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.  கட்சி கோஷம் போடவும் அனுமதி இல்லை. மீறி சிலர் கத்தியபோது ராம்பில் வந்த விஜய் அவர்களை கண்டித்தார்.

அரங்கத்தில் நாம் பார்த்து வியந்த ஒரு விஷயம்... வந்திருந்தவர்களில் 80 சதவிகிதம் இளைஞர்கள். அதுமட்டுமல்ல கூட்டத்தில் பாதி பெண்கள். ஆண்களின் எண்ணிக்கைக்கு இணையாக பெண்கள் வந்திருந்தது விஜய்யின் அரசியலுக்கு பெண்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை அழுத்தமாக உணர்த்தியது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் இது நடுக்கத்தை ஏற்படுத்தும்.

நிகழ்ச்சியை ரியோ மற்றும் அஞ்சனா தொகுத்து வழங்கினர். விஜய் படங்களின் பல பாடல்களின் தொகுப்பாக முதல் பாடல் பாடப்பட்டது.  ‘மேகமாய் வந்து போகிறேன்’ பாடலை எஸ்.பி.பி சரண் பாடிய போது ஸ்டேடியத்தில் நிஜமாகவே மழை பொழிந்தது. ஆண்ட்ரியா, திப்பு இருவரும் சேர்ந்து சின்ன தாமரையே  பாடலை பாடிய போது ரசிகர்களும் எழுந்து ஆடினர்.

பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு கையசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். மமிதா பைஜூவின் நடனம் ரசிகர்களை குஷிப்படுத்தியது.

 “விஜய்க்கு நாங்கள் கிளைகளோ , இலைகளோ இல்லை… முறிவதற்கும், உதிர்வதற்கும். அவருக்கு நாங்கள் வேர்கள்… உயிர் உள்ளவரை தாங்கிப்பிடிப்போம்.” என்றி அட்லீ பேசியது ரசிகர்களை கவர்ந்தது.

 ‘கோடம்பாக்கம் ஏரியா…ஓட்டு கேட்க வாறியா…’ என்கிற ‘சிவகாசி’ பட பாடலை விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாடினார். அப்போது  ரசிகர்களின் ஆர்பாட்டத்துக்கு அளவே இல்லை.

 படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த ரிதன்யா மேடையில் வைத்து விஜய்யிடம், “ நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை எல்லாம் உங்கள் காரில் கூட்டிக்கொண்டு போய், கோலாலம்பூரை சுத்திக் காட்டுவீர்களா அங்கிள்?” என்று அன்பாக கேட்க, விஜய்யும் ,  “கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்”என்று தன் கைகளை உயர்த்தி நெகிழ்வுடன் சம்மதம் சொல்ல ரிதன்யாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். 

*****

7.1.26 தேதியிட்ட குமுதம் இதழ் அச்சேறும் கடைசி நிமிடம் வரை நடந்த நிகழ்வுகளை இதழில் வெளியிட்டிருந்தோம். அடுத்தடுத்து நடந்த நிகழ்ச்சிகளின் நேரடி ரிப்போர்ட் இதோ …
*****

லோகேஷ் கனகராஜ், நெல்சன் மற்றும் அட்லீ மூவருமே தாங்கள் விஜய் ரசிகர்கள் என்பதை உணர்த்தும் விதமாக, ‘தளபதி பாய்ஸ்’ என்று எழுதப்பட்ட வாசகங்களின் பின்ணனியில்  விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். 

ஜனநாயகன் பற்றி பேசிய ஹெச். வினோத், "இது முழுக்க முழுக்க மாசான பொழுதுபோக்கு படம். விஜய்க்கு  ஏற்றவாறு ஒவ்வொரு பிரேமிலும் கதை பயணிக்கிறது. கடைசி 15 நிமிடங்கள் விஜய்கான சினிமா ஃபேர்வெல் போல படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்... இது உங்களை நிச்சயம் மகிழ்விக்கும்! இது விஜய்க்கான கடைசி படம் அல்ல. புதிய தொடக்கத்திற்கான அட்டகாசமான ஆரம்பம்! " என்று சொன்னதும் ரசிகர்களிடையே அப்படி ஒரு ஆரவாரம்.

நிகழ்ச்சி பற்றிய சமூக வலைத்தள தொகுப்பை வழங்க, ஏராளமான இன்ஃப்ளுயன்ஸ்யர் ஜோடிகள் மலேசியாவில் குவிந்திருந்தனர்.அவர்களை தவிர்க்கும் விதமாக நெட் கனெக்சனை முடிந்த வரை பிளாக் பண்ணி வைத்திருந்தனர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

நிகழ்ச்சி நடைபெறுவதாக சொன்னது 27ஆம் தேதி. ஆனால் விஜய் பேசியது 28ஆம் தேதி. மதியம் 4 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி நீண்டு கொண்டே போய் நள்ளிரவை கடந்தும் உற்சாகம் குறையாமல் நடந்து கொண்டிருந்தது. பேச வந்த அனைவரும் உணர்ச்சிகரமாக பேசி பேசி நேரத்தை கடத்தியதில் இரவு 12 மணிக்கு தான் மைக் பிடித்தார் விஜய். 

அதிக நேரம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 15 நிமிடங்களில் பேசி முடிக்கும் விதமாக கச்சிதமாக தனது உரையை தயாரித்து வந்திருந்தார். பேச்சின் முடிவில் சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு என்று ரசிகர்களிடம் வருத்தம் தெரிவிக்க, ரசிகர்கள் நெகிழ்ந்து போய் நள்ளிரவு கடந்த நிலையிலும் உற்சாக குரல் கொடுத்தனர்.

விஜய்யின் பேச்சுக்கு பெரும் ஆவாரம் செய்தவர் அவரது அருகே அமர்ந்திருந்த பூஜா ஹெக்டே. கிரிக்கெட் மைதானத்தில் கங்குலி பனியனை கழற்றி சுற்றிய காட்சி போல ஸ்லீவ்லெஸ் பூஜா, கைகளைச் சுழற்றி கொடுத்த 'வைப்'பான உற்சாக போஸ்  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.விஜய்யின் ரத்தின சுருக்க பேச்சில் பொடி வைத்த வார்த்தைகள் அடுத்தடுத்து விவாதங்களுக்கு வெடி வைத்து விட்டு போனது. 

* மலேசியா என்றாலே நினைவுக்கு வரும் தமிழ் படம் நண்பர் அஜித் நடித்த பில்லா. இந்த டயலாக் அவரது ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்தது. 

* சொல்லலாமா வேணாமா தெரியல, இது என்னோட கடைசி படம் என்று விஜய் ஆரம்பிக்க, ரசிகர்கள் பெரிதாக நோ என்று கத்தினர். சரி விடுங்க என்று டாபிக்கை மாற்றிய விஜய்,  ‘ஏன் சினிமா விட்டு போறீங்க?’ன்னு பலரும் கேட்டாங்க... ‘நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழ் சினிமாவில் எனக்கு சின்னதாக ஒரு மணல் வீடு கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால், ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு பெரிய மாளிகையே கட்டிக் கொடுத்துட்டீங்க... அதுக்காக உங்களுக்கு நன்றியோடு இருப்பேன்’ அப்படின்னு சொல்லிட்டு போற ஆளு நான் இல்ல. எனக்காக எல்லாம் இழந்து என்னை வாழவைத்த என் ரசிகர்களுக்கு நன்றிக்கடன் தீர்த்துட்டு தான் போவேன். நாம ஒருத்தருக்கு ஒரு நல்லது பண்ணினா அது கடைசியில் நமக்கே வந்து தீரும். இதைத் திடமா நம்புகிறவன் நான். சொல்றதை தான் செய்வேன்... பேசுறதை நிச்சயம் செய்வேன்" என்று அரசியல் களத்தில் தான் உறுதியாக இருக்கப் போவதை சூசகமாக தெரிவித்தார்.

நாம ஒரு விஷயத்தை பண்ணினால் அதற்கு தடங்கல் பண்ண இங்க ஏராளமான ஆட்கள் இருக்காங்க நமக்கு நல்லது பண்றதை விட தடுக்க நினைக்கிறவங்க தான் அதிகம் அந்த எதிரிகள் தான் நமக்கான வளர்ச்சி ஆயுதம். அதனால நாம வலுவான எதிரியோட மட்டும்தான் மோதணும்... அப்பதான் நாம நினைச்ச இடத்திற்குப் போக முடியும். சும்மா போறவன், வர்றவன் எல்லாம் நமக்கு எதிரி கிடையாது." என்று போகிற போக்கில் அடித்த வார்த்தை அரசியல் களத்தின் அடையாளத்தை அசைத்து பார்ப்பதாக இருந்தது.

 ‘அரசியல்ல நீங்க தனியா, அணியா?’ன்னு கேக்குறாங்க... நாம என்னைக்கு ப்ரோ தனியா இருந்திருக்கோம்..? நாம எல்லாருமே எப்பவுமே ஒரு அணியாதான் இருந்திருக்கோம். அப்படித்தானே நாம வளர்ந்தோம். இப்பகூட இன்னும் தெளிவா சொல்லலையேன்னு உங்களுக்குத் தோணலாம். எல்லாத்தையும் உடைச்சு சொல்லிட்டா எப்படி? சஸ்பென்ஸ் இருந்தாதானே, சுவாரஸ்யம் இருக்கும்..." என்று தன் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள முடியாதவாறு ஹைப் ஏற்றினார் விஜய்

பேச்சின் முடிவில் பாடல் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய விஜய், திடீரென இசைக் குழுவை திரும்பி ஒரு பார்வை பார்த்தார்.லியோ படத்தில், "எங்கடா அந்த மஞ்ச சேலை?" என்று கேட்பாரே! அப்படி ஒரு பார்வை அது. தொடர்ந்து, "போடுறா பாட்டை!" என்று தனக்கே உரிய அதிகார தோரணையில் குரல் கொடுத்து ஜனநாயகன் பட பாட்டுக்கு ஆடினாரே ஒரு நடனம்... அரங்கமே ஆடியது.

மலேசியாவில் விஜய் தங்கி இருந்த ஹோட்டல், விமான நிலையம், என்று எங்கெங்கும் ரசிகர் கூட்டம்... ஒரே ஆர்ப்பாட்டம்.  இந்த இடங்களில் எல்லாம் மேக்கப் இல்லாத அசல் முகத்தோடு காணப்பட்டார் விஜய். லேசான வெண் தாடி, சில இடங்களில் ரீடிங் கிளாஸ் என்று இயல்பான விஜய்யைப் பார்க்க முடிந்தது.

80 ஆயிரம் பேர் கூடிய அரங்கில் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் மிக நேர்த்தியாக விழா நடந்து முடிந்தது. ஒரே ஒரு திருஷ்டிப் பொட்டாக விழா நடந்த அரங்கில் த.வெ.க கொடியைக் காட்டிய ரசிகரை அடுத்த நொடியே  போலீசார் அலேக்காகத் தூக்கிச் சென்றது மட்டுமே!ஜனநாயகன் நிகழ்ச்சி மலேசியாவில் நடத்தப்பட்டதன் பின்னணியில் இருப்பது அரசியல் காரணமா? என்று பலரும் மண்டையை உடைக்க, அதற்கு இன்னொரு கோணத்தில் பதில் கிடைத்தது.

அதாவது, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ஜனநாயகன் படத்தின் மலேசிய உரிமையை வரலாறு காணாத தொகை கொண்டு வாங்கி இருக்கிறது. இதற்கு நன்றிக் கடனாக ஒரு கோரிக்கை வைத்தாராம் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனர். படப் பாடல் வெளியிட்டை மலேசியாவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது. 

தமிழகத்திலும் சூழல் சரி இல்லாத நிலையில், "சரி வைப்போமே!" என்று தயாரிப்பு நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால் தனது புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் பெரும் கூட்டத்தைக் கூட்டி இப்போது அசரடிக்கும் லாபம் பார்த்து விட்டாராம் மலேசியா ரைட்சை பெற்ற மாலிக். 

பாடல் வெளியீட்டு நிகழ்வில் வசூல் ஆன தொகை ரூபாய் 54 கோடி என்று கூறப்படுகிறது. இதுதான் ஒரு தமிழ் பட ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனில் வசூலிக்கப்பட்ட பிரம்மாண்ட தொகையாம். இது வெளியில் தெரியாத நிலையில், அதிக கூட்டத்தைக் கூட்டிய தமிழ் பட பாடல் வெளியீட்டு விழா என்ற பெருமையோடு மலேசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்று விட்டது விஜய்யின் ஜனநாயகன்.

நிகழ்ச்சி இரவு ஒன்றரை மணிக்கு முடிந்தது. கலைந்து சென்ற ரசிகர்கள் அனைவரது முகத்திலும் அப்படி ஒரு திருப்தி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow