கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.... கண்கலங்கி பேசிய பாடகி ஸ்ரேயா கோஷல்!
கொல்கத்தாவில் செப். 14ம் தேதி நடக்கவிருந்த எனது இசை நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்திற்கு ஆழ்ந்த சோகத்துடன் தள்ளி வைக்கிறேன் என பாடகி ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சம்பவம் தொடர்பாக CBI விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொல்லப்பட்ட தனது மகளுடன் பணிபுரிந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி அவர்களது பெயர்களுடன் மாணவியின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே வேளையில் சம்பவம் நடந்த மருத்துவமனை, போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. அதில், இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் மாநில பொதுப்பணித் துறை ஊழியர்கள் குற்றம் நடந்த செமினார் ஹாலை ஒட்டி இருந்த அறையில் மறுசீரமைப்பு பணிகளைச் செய்துள்ளனர். அதாவது குற்றம் நடந்த ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அவசர அவசரமாக அங்கே மறுசீரமைப்பு பணிகளைச் செய்துள்ளனர். இதுகுறித்து CBI அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பயிற்சி மருத்துவரின் உடலைப் பாதுகாக்காமல் அவசர அவசரமாகத் தகனம் செய்தது ஏன் என்பது குறித்து இப்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மருத்துவமனை வட்டாரத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக உடலை உடனடியாக தகனம் செய்ய அறிவுறுத்தியது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
மருத்துவரின் கொலையைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக திரைப்படத்துறை, சின்னத்திரையை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோரும் போராட்டங்களில் பங்கேற்றனர். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரை நட்சத்திரங்கள் இந்த சம்பவத்தைக் கண்டித்து குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில், “சமீபத்தில் கொல்கத்தாவில் நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஒரு பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்படியான சம்பவம் என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
கொல்கத்தாவில் செப். 14ம் தேதி நடக்கவிருந்த எனது இசை நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்திற்கு ஆழ்ந்த சோகத்துடன் தள்ளி வைக்கிறேன். இந்த நிகழ்ச்சி பலராலும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான் அனைவரையும் ஒற்றுமையுடன் இணைக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பிற்காகவும், மரியாதைக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.
மேலும் படிக்க: கடுமையான காய்ச்சல்... ‘தக் லைஃப்’ படத்திற்காக உழைத்து ஓய்ந்து ஓடாக தேயும் சிம்பு!
என்னுடைய இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். தயவுசெய்து புதிய தேதியை அறிவிக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?