Rewind: “புத்தருக்கு தியானம்: எனக்கு எழுத்து!"- ஜெயமோகன் (பாகம் 3)

26.10.2000 அன்று குமுதம் இதழிலில் வெளிவந்த பேட்டி

Rewind: “புத்தருக்கு தியானம்: எனக்கு எழுத்து!"- ஜெயமோகன் (பாகம் 3)
ஜெயமோகன்

“புத்தருக்கு தியானம்: எனக்கு எழுத்து!" (பாகம் 3)

- ஜெயமோகன்

26.10.2000 அன்று குமுதம் இதழிலில் வெளிவந்த பேட்டி



உங்கள் நாவல் விஷ்ணுபுரத்தில் அதன் பிரயோகம் அதிகமாக இருக்கிறதே?

"விஷ்ணுபுரத்தைப் பொறுத்த வரை அது சமஸ்கிருதத்தைப் பற்றின நாவல். அந்தச் சூழலையும், சிந்தனைகளையும் முன்வைக்கிற நாவல். அதற்கேற்றபடி உணர்வுபூர்வமாக சமஸ்கிருதம் அதில் கையாளப்பட்டிருக்கிறது.  என்னுடைய படைப்பிலக்கியத்திலும், சிந்தனையிலும் நான் சார்ந்திருக்கிற மொழி சுந்தர ராமசாமியின் மொழி. இப்போது அதன் தாக்கம் சற்றுக் குறைந்திருந்தாலும், இன்றும் அதன் தாக்கம் என் படைப்பு மொழியில் உண்டு."

துறவு நிலைக்கான தேடுதல் மனநிலை உங்களுக்கு இருப்பதை முதலில் தெரிவித்திருந்தீர்கள். துறவு நிலைக்கான அந்தத் தூண்டுதலும், வேகமும் படைப்பு ரீதியாக நீங்கள் இயங்க ஆரம்பித்த பிறகு சமப்படுத்தப்பட்டிருக்கிறதா?

“என்னுடைய படைப்புகள் எல்லாமே என் விசாரணையும் என்னுடைய துக்கங்களும்தான். திரும்பத்திரும்ப நான் கூறுவது இதையே. புத்தருக்கு தியானம் எப்படியோ அப்படி எனக்கு எழுத்து.”

உங்களது பின் தொடரும் நிழலின் குரல் என்கிற நாவலை ஒட்டி நீங்கள் மார்க்சீயத்திற்கு விரோதி என்கிற குற்றச்சாட்டும் உங்கள் மீது வைக்கப்படுகிறதே?

“நாவலைப் படிக்காமலே அறிவுஜீவித்தனமாகப் பேச ஒரு கும்பல் தமிழ்நாட்டில் இருக்கிறது. முதலில் இது மார்க்சீயத்தைப் பற்றின நாவலே அல்ல. சோவியத் ரஷ்யா பற்றின நாவலும் கிடையாது. லட்சியவாதம் என்பது எப்படித்  தவிர்க்க முடியாமல் வன்முறைக்குப் போகிறது? அது கோடிக்கணக்கான அழிவை உண்டாக்குகிறது. சிறிது காலம் கழித்து அந்த லட்சியவாதம் தப்பு என்றால் இந்தக் கோடிக்கணக்கான அழிவுக்கு என்ன பதில்? இந்தக் கேள்விகளைத்தான் பக்கம் பக்கமாகப் பேசுகிறது அந்த நாவல். இதைப் பேச வசதியான ஒரு சமகால வரலாற்று களம்தான் ருஷ்ய வரலாறும் கம்யூனிசமும்.

மற்ற எழுத்தாளர்களை விட, எழுதத் துவங்கிய குறுகிய காலத்திற்குள் கதை, நாவல்கள், கட்டுரைகள் என்று எழுதுவதில் வேகம் காட்டுவதற்கு என்ன காரணம்?

“தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் ஏன் நிறைய எழுதவில்லை என்றால் அவர்களது வாழ்க்கையில் எழுத்துக்குக் கொடுத்திருக்கிற இடம் குறைவு எவ்வளவோ விஷயங்களுக்கிடையில் சின்ன ஓய்வு மாதிரி, எப்போதாவது 'தண்ணி’ அடிக்கிற மாதிரி கதை, கவிதைகள் எழுதுவார்கள். அவர்கள் போக முடிகிற தூரம் அவ்வளவுதான்.

என்னுடைய எழுத்து அப்படியல்ல. நான் தூங்குகிற நேரத்தில் கூட எழுத்தைப் பற்றி, எழுதுவதைப் பற்றித்தான் கனவு காண்கிறேன். அதைப் பற்றித்தான் யோசிக்கிறேன். எழுதுகிறேன். என்னுடைய பல நாவல்களைத் திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறேன். குறைந்தது மூன்று முறை எழுதாமல் எந்தப் படைப்பையும் நான் பிரசுரித்ததில்லை. இந்தக் கடும் உழைப்பை தமிழ் விமர்சகர்களை விட தமிழ் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow