மழை விட்டும் விடாத தூவானம்.. ஸ்டாலினை டென்சன் ஆக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்.. பரபரக்கும் அறிவாலயம்

மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழ்நாட்டில் பரபரப்பு ஓயவில்லை. ரிசல்ட் எப்படி இருக்குமோ என்று அரசியல் கட்சித்தலைவர்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பரபரப்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Apr 26, 2024 - 13:16
மழை விட்டும் விடாத தூவானம்.. ஸ்டாலினை டென்சன் ஆக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்.. பரபரக்கும் அறிவாலயம்

இந்திய நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 2ஆம் தேதி வரைக்கும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சுட்டெரித்த வெயிலுக்கு நடுவே சூடாக அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தனர் அரசியல் கட்சித்தலைவர்கள். 

கடந்த முறை அனைத்து தொகுதிகளையும் மொத்தமாக அள்ளிய திமுக இந்த முறையும் 40க்கு 40 என்ற இலக்குடன் வியூகம் அமைத்து களமிறங்கியது. மாவட்ட செயலாளர்கள் தொடங்கி பூத் பொறுப்பாளர்கள் வரை அதிக வாக்குகளை பெற வேண்டும் என்ற இலக்குடன் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்தனர். 

தமிழ்நாட்டில் கடந்த வாரம் 39 தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும் வாக்கு சதவிகிதம் குறைந்து விட்டது. ஏன் வாக்கு சதவிகிதம் குறைந்தது என்று அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க வாக்குப்பெட்டிகளுக்கு இரவு பகலாக ஷிப்ட் போட்டு காவல் காத்து வருகின்றனர். 

திமுகவில்தான் டென்சன் அதிகமாக உள்ளது. காரணம் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்கட்சிகளை வாஷ் அவுட் செய்த நிலையில் இந்த முறை வெற்றி சதவிகிதம் குறைந்தால் அது மக்களிடையே செல்வாக்கு குறைந்து விட்டதாகவே கருதப்படும். எனவேதான் வாக்கு சதவிகிதம் குறைந்தாலோ, வேட்பாளர் தோல்வியடைந்தாலே அதற்கான விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள் என்று தேர்தலுக்கு முன்பே எச்சரித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

கொங்கு மண்டலத்திலும், தென் மாவட்டத்திலும் சரியாக செயல்படாதவர்களின் லிஸ்ட் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதைப்பார்த்து முகம் சிவந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் தூக்கி அடிக்க முடிவு செய்திருக்கிறாராம். விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்ற தகவலும் அறிவாலயம் வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. 

இது ஒரு புறம் இருக்க நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி தலைவருடனும், எம்.பி வேட்பாளர்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  தமிழ்நாட்டிலும்  புதுச்சேரியிலும் நமது வெற்றி உறுதி என்று நம்பிக்கையுடன் பேசியிருக்கிறாராம். ஒரு சில இடங்களில் வாக்கு சதவிகிதம் குறைந்தாலும் வெற்றி நிச்சயம் என்று ரிப்போர்ட் கூறியிருப்பதாக பேசியுள்ளாராம் ஸ்டாலின்.  

தென் மாவட்டங்களில் நம்முடைய கூட்டணியின் வெற்றி சதவிகிதம் குறையும் . அங்கே கொஞ்சம் நிர்வாகிகள் அலட்சியமாக இருந்துவிட்டனர். தமிழ்நாடு மட்டுமின்றி வடமாநிலங்கள்,தெலுங்கானா, கர்நாடகாவிலும் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது என்றும் நம்பிக்கையுடன் பேசியுள்ளாராம் முதல்வர் ஸ்டாலின். 

தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாகவே மிகவும் நம்பிக்கையுடன் பேசினாலும் தமிழ்நாட்டில் சில இடங்களில் சந்தேகமாக இருப்பதாகவும், வாக்கு சதவிகிதம் குறைவது குறித்தும் உளவுத்துறை அனுப்பியுள்ள ரிப்போர்ட்தான் முதல்வர் மனதில் நெருடலை ஏற்படுத்தியுள்ளதாம். ஜூன் 4ஆம் தேதி வரைக்கும் மாறி மாறி வரும் தகவல்கள் அரசியல் கட்சித்தலைவர்களின் தூக்கத்தை காவு வாங்கும் என்பது நிச்சயம்.

அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் மந்தமாக வேலை செய்த நிர்வாகிகளின் பதவிகள் பறிபோவது உறுதிதான். வயதான நிலையில் உடல் நலத்தை காரணம் காட்டி ஏசி ரூமில் ஓய்வெடுத்த மூத்த நிர்வாகிகளின் மாவட்ட செயலாளர்களின் பதவியை பறித்து விட்டு அவர்களுக்கு பதிலாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் முடிவு செய்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின். விருதுநகர் மாவட்டத்தில் சிலரது பதவியில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow