சண்டையில கிழியாத சட்டை ஏது.. கோஷ்டி பூசல்.. காங்கிரஸ் நகர தலைவரை ஓட விட்ட கும்பல்.. அதிர்ந்த அரக்கோணம்

Apr 10, 2024 - 12:34
சண்டையில கிழியாத சட்டை ஏது.. கோஷ்டி பூசல்.. காங்கிரஸ் நகர தலைவரை ஓட விட்ட கும்பல்.. அதிர்ந்த அரக்கோணம்

அரக்கோணத்தில் கோஷ்டி பூசலால் நகர காங்கிரஸ் தலைவரின் சட்டையை கிழித்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்தனர்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அரக்கோணத்தில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் திறந்த வெளி வாகனத்தில் பரப்புரை செய்தனர். அப்போது பழைய பேருந்து நிலையத்தில் நகர காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி நிர்வாகி விமல் மற்றும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு வாக்கு சேகரித்தனர்.

அதனால் கோபமடைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்தரப்பு நிர்வாகிகள், நீங்கள் எல்லாம் எங்களுடன் வந்து வாக்கு சேகரிக்க கூடாது என்று சொல்லி நகர காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதியின் சட்டையை கிழித்தும் அவரை கையாலும் மற்றும் கட்டையாலும் தாக்கினர். இந்த சண்டையில் காங்கிரஸ் நிர்வாகி விமலுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த நகர காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, நிர்வாகி விமல் ஆகியோர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow