விசிக டூ தவெக: பாதை மாறும் பசித்த சிறுத்தைகள்.. என்ன செய்யப்போகிறார் திருமா?

தர்மபுரி பகுதியில் வி.சி.க இளைஞர்கள் பலர், கொத்துக் கொத்தாக த.வெ.க.வில் இணைவது அக்கட்சியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

விசிக டூ தவெக: பாதை மாறும் பசித்த சிறுத்தைகள்.. என்ன செய்யப்போகிறார் திருமா?
vck party members join tvk in dharmapuri

வி.சி.க தலைவர் திருமாவளவன், வருகிற ஆகஸ்ட்டில் தர்மபுரிக்கு வருவதையொட்டி, மாவட்டச் செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 'வி.சி.க. முகாம் கட்டமைப்பு உடைகிறது' என வெளிப்படையாகவே குமுறல்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து காரிமங்கலம், பத்தலஹள்ளி விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் செயலாளர் விமலிடம் பேசினோம். ”இங்கு வி.சி.க. வலுவாகத்தான் இருந்தது. இந்நிலையில் திடீரென எங்கள் ஊர் இளைஞர்கள் பலர் த.வெ.க.வில் இணையத் தொடங்கினர். விஜய் ரசிகர் மன்றமாக இருந்தவரை ஒன்னும் பிரச்னை இல்லை. கட்சியாக உருவானதும், இளைஞர்கள் பலர், விஜய் கட்சிக்கு மாறி கொடிக்கம்பம், போர்டு வைக்க முற்படுகின்றனர். இப்பிரச்னை எங்கள் ஊரில் மட்டுமல்ல, கம்பைநல்லூர், போளையம்பள்ளி என விசிக வலுவாக உள்ள எல்லா ஏரியாவிலும் இருக்கிறது. இதைத்தான் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தோம்” என்றார்.

வி.சி.கவிலிருந்து தவெகவுக்கு தாவிய பிரபுவிடம் பேசினோம். "வி.சி.கவில் பல வருடங்களாக உழைத்தோம். தேர்தல்களின்போது கடுமையாக களப்பணி ஆற்றினோம். கட்சிக்காக எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்திருக்கிறோம். ஆனால், பலன்களை மட்டும் ஒரு சிலரே அனுபவிக்கிறார்கள். மேலிட நிர்வாகிகளிடம் புகாரளித்தும் பயனில்லை. வி.சி.க. தலைமை மீது எப்போதும் மாறாப்பற்று இருந்தாலும் லோக்கலில் உள்ளவர்களின் செயல்பாடு பிடிக்கவில்லை. அதனால் தவெகவில் இணைந்து அம்மாப்பேட்டை கிளைச் செயலாளராக செயல்பட ஆரம்பித்துள்ளேன்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து வி.சி.க மூத்த நிர்வாகியிடம் பேசினோம். ”தமிழகத்தில் அதிக இளைஞர்கள் நிரம்பியுள்ள கட்சி வி.சி.க. இவர்களில் கொள்கை கோட்பாடு, அரசியல் புரிதல் இல்லாத சிலர் பதவிக்காக விஜய் கட்சிக்குச் செல்கின்றனர். வி.சி.கவில் முகாம் கட்டமைப்பு இருக்கிறதே தவிர, அது உயிர்ப்புடன் இல்லை. காரணம் கட்சி விதிமுறைப்படி 3 வருடங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளை மாற்றாமல், 8 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளனர். ஒன்றியச் செயலாளர்கள் எல்லாம் 10 வருடங்களுக்கும் மேலாக பதவியில் இருக்கிறார்கள். அதேசமயம் கட்சிக்காக இவர்கள் சிறு துரும்புகூட எடுத்து போடுவதில்லை. போலீஸ் ஸ்டேஷன், தேர்தல், கட்சிப் பொதுக்கூட்டம் என்றால் மட்டும் முன்னே வந்து நிற்பார்கள். தலித் மக்களுக்கான பொதுப் பிரச்னைகள் எவ்வளவோ உள்ளன. அதையெல்லாம் இவர்கள் கண்டுகொள்வதில்லை. இவற்றை எல்லாம் தலைமை மறுசீரமைப்பு செய்யும் என விசிகவினர் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதனை தவெகவினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டுமென்றால் கட்சியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். விரைவில், தலைவர் திருமா 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இதுகுறித்து தர்மபுரி விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் சாக்கன் சர்மாவிடம் பேசினோம். "வி.சி.கவினர் கொள்கை கோட்பாடுகளுடன் பயணிப்பவர்கள். தலித்துகள் மட்டுமே வி.சி.கவில் இருப்பதில்லையே? விஜய் ரசிகர்களும் இருந்திருப்பார்கள். விஜய் கட்சி ஆரம்பித்ததும் போகிறார்கள்” என முடித்துக்கொண்டார்.

(கட்டுரையாளர்: பொய்கை.கோ.கிருஷ்ணா/ குமுதம் ரிப்போர்ட்டர்/ 25.07.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow