அதிகார ஆணவம்.. ஊழலின் மற்றொரு பெயர் திமுக.. லோக்சபா தேர்தலில் பாடம் புகட்டுவோம்... பிரதமர் மோடி சூளுரை
சுரண்டல், ஊழலின் மற்றொரு பெயர் திமுக. திமுக காங்கிரஸ் செய்த பாவங்களுக்கு மக்கள் லோக்சபா தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது ஊழலை வெளியேற்றும் தேர்தல்.. வம்சாவளி அரசியலை வெளியேற்றும் தேர்தல் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நீலகிரி வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, சகோதர சகோதரிகளே.. நீலகிரி தேயிலைத் தோட்டங்களைப் பார்த்தால், தேநீர் விற்பவரின் மகனுக்கு மகிழ்ச்சியாக இருக்காதா? என்று கேட்டார். அதைக்கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்தது.
திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிய மோடி.. திமுகவை வீட்டிற்கு அனுப்ப பாஜகவினால் மட்டுமே முடியும். திமுக காங்கிரஸ் போன்ற குடும்ப கட்சிகள் பொய் சொல்லித்தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்றார்.
திமுகவும் காங்கிரஸ் கட்சியும் பல ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார்கள், ஆனால், அடிப்படை வசதிகள் எதையுமே செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டிய மோடி, லட்சக்கணக்கான மக்கள் வீடு இன்றி, குடிக்க தண்ணீர் இன்றி கஷ்டப்பட்டனர் என்றார். கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சி காலத்தில், வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது, வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
பரம்பரை வம்சாவளி கட்சியினர் அவர்களின் குடும்ப வாரிசுகள் மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கின்றனர். ஆனால், பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணை இந்திய ஜனாதிபதியாக உயர்த்தி அழகு பார்த்தது பாஜக., அதற்கு கூட அவர்கள் ஆதரவு தரவில்லை, தங்கள் வம்சாவளி வாரிசுகள் வர நினைக்கிறார்கள் என்றார்.
இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் இந்தியாவை நம்ப மறுக்கிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் மேக் இன் இந்தியாவில் மருந்து தயாரித்து உலக நாடுகளுக்கு கொடுத்தோம். பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டது. இன்டி கூட்டணியில் உள்ளவர்கள் கொரோனா தொற்று நோயை மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதாரம் சீர் குலைந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால், அதை முறியடித்தோம். கோவையில் பல நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டது. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைத்தது என்று பெருமிதத்துடன் மோடி குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் ஏராளமான திறமையும், மனித ஆற்றலும் மிகுந்துள்ளது, திமுக ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் சக்தியை வீணடித்தனர். ஜவுளி தொழிலை நலிவடைய செய்து விட்டது திமுக. மின் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. ஊழலை ஈடுகட்ட மின் கட்டண இழப்பை மக்கள் மீது திணிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார் மோடி.
திமுகவினர் தங்களுடைய சொந்த சுய லாபத்திற்காக அதிகபட்ச கேடுகளை விளைவித்துக்கொண்டிருக்கின்றனர். நாம் இங்கு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளோம். இது இந்தியா கூட்டணிக்கு தெரியுமா? நாட்டில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாஜக ஆட்சி நடக்கும் இந்த காலத்தில் மாநிலங்களில் உயர்வுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய்களை கொடுத்துள்ளது என்றார் மோடி.
பாஜக ஆட்சி காலத்தில், 2 வந்தே பாரத் ரயில்கள் கோவைக்கு இயக்கப்பட்டன. மேலும், மாதிரி தளவாட பட்டறை பூங்காக்கள் உருவாக்கப்பட்டதால், கோவை மாவட்டத்தின் முன்னேற்றம் அதிகரித்துள்ளது. தேசிய விரைவு நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. திமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்கிறது. நாட்டில் இந்தியா கூட்டணி பிரிவினை வாதம் என்கிற ஆபத்தான விளையாட்டை விளையாடி வருகிறது என்று மோடி குற்றம் சாட்டினார்.
ஜல்ஜீவன் திட்டத்தினால் கோடிக்கணக்கான வீடுகளுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் கட்சிக்காரர்களுக்குப் பிறகுதான் மற்றவர்களுக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்படுகிறது. கோவையில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கிறது என்பது வேதனை என குறிப்பிட்டார்.
திமுக எப்போதுமே வெறுப்பு அரசியலை செய்து கொண்டிருக்கிறது. திமுகவின் கவனம் எப்போதுமே தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மீது இருந்ததில்லை. வெறுப்பு அரசியலை பின்பற்றுகிறது திமுக. நீலகிரியில் வெற்றி பெற்றால், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்.. இது மோடியின் கியாரண்டி என்றார்.
திமுகவினரும், இந்தி கூட்டணியினரும் எதிர்ப்பு அரசியலை தவிர எதையும் உருப்படியாக செய்ததில்லை. புனிதமான சங்கமேஸ்வரர் கோவிலில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை காப்பாற்றுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
நாம் 5 ஜி என முன்னேறியிருக்கிறோம். திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் 2ஜி ஊழலில் ஈடுபட்டவர்கள். சுரண்டலுக்கும், ஊழலுக்கும் இன்னொரு பெயர்தான் திமுக. ஊழல்வாதிகளை காப்பதுதான் திமுகவின் குறிக்கோள். நாம் ஊழல்வாதிகளை தண்டிப்போம் என்று சொல்கிறோம்.
யார் இந்த அண்ணாமலை என்று திமுகவின் ஒரு தலைவர் கேட்கிறார். அந்த அளவிற்கு ஆணவம் அவர்களின் கண்களை மறைக்கிறது. அது தமிழ்நாட்டிற்கு எதிரானது. ஒரு இளைஞர் களத்தில் வீரம் காட்டுகிறார். அவரை தெரியவில்லையா? இதுதான் திமுகவின் குணம். ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து இளைஞன் ஒருவர் நேர்மையான அரசியல் செய்ய வருவது திமுகவினருக்கு பிடிக்கவில்லை.
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்து விட்டார்கள். இந்தியாவின் இறையாண்மையை சேதப் படுத்தியதற்கான விலையை நமது மீனவர்கள் கொடுத்து வருகின்றனர். சுரண்டல், ஊழலின் மற்றொரு பெயர் திமுக. திமுக காங்கிரஸ் செய்த பாவங்களுக்கு மக்கள் லோக்சபா தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார் மோடி. இது ஊழலை வெளியேற்றும் தேர்தல்.. வம்சாவளி அரசியலை வெளியேற்றும் தேர்தல்.. போதைப்பொருளை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் தேர்தல் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
What's Your Reaction?