'இறந்தவர்களின் ஆவி ஸ்டாலினை சும்மா விடாது... 2026ல் பார்ப்பீங்க'... ஜெயக்குமார் ஆவேசம்!
'எதிர்க்கட்சித் தலைவர் மருந்து இல்லை என கூறிய பிறகு தான் மும்பைக்கு சென்று மருந்துகளை வாங்கி வந்தனர். மடியில் கனமில்லை என்றால் இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்றலாமே? '
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் ஆவிகள் முதல்வர் ஸ்டாலினை தண்டிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 58 பேர் பலியாகி விட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த விவாகரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அண்ணாமலை, நாம் தமிழரின் சீமான் ஆகியோர் வலியறுத்தியுள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்பாவி மக்களின் உயிர்போக காரணமாக இருந்த முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்; கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் கூறியதாவது:- தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் கள்ளச்சாராய மரணங்கள், போதை வஸ்துகள் சர்வ சாதாரணமாக நடமாடுகிறது. கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டபோது இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என முதலமைச்சர் வாய்ச்சவடால் விட்டார்.
ஆனால் இப்போதும் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து அரசின் அலட்சியத்தால் உயிர்கள் பறிபோகியுள்ளன. மருத்துவத்துறையின் அலட்சியத்தால் 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் மருந்து இல்லை என கூறிய பிறகு தான் மும்பைக்கு சென்று மருந்துகளை வாங்கி வந்தனர். மடியில் கனமில்லை என்றால் இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்றலாமே?
விசாரணையை சிபிஐக்கு மாற்றினால் ஆளும் கட்சியினர் பலர் சிக்குவார்கள். சிபிஐ விசாரிக்க கோரி நீதிமன்றம் சென்றுள்ளோம் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு நபர் ஆணையம் வெறும் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனையை சட்டசபையில்தான் விவாதிக்க முடியும். 60க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து உள்ள நிலையில் இதைப் பற்றி விவாதிக்க சட்டமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது.
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில்தான் சட்டமன்றம் உள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் காவல்துறையினர் அனுமதி மறுக்கிறார்கள். மருந்து இல்லை என பதற்றம் ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஒரு அமைச்சர் இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் ஆவிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சும்மா விடாது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஸ்டாலினை மக்கள் நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்து விடுவார்கள்'' என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
What's Your Reaction?