"ஆவணங்களை எடுத்தது உண்மை".. ஒரு மாசமா என்னால பேச முடியல.. ED ரெய்டு குறித்து அமீர் விளக்கம்...

ஜாபர் சாதிக் விவகாரத்தால் தன்னால் ஒரு மாதமாக பேச முடியவில்லை என்பது மட்டும் உண்மை என்று இயக்குநர் அமீர் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். 

Apr 10, 2024 - 12:26
Apr 10, 2024 - 12:31
"ஆவணங்களை எடுத்தது உண்மை".. ஒரு மாசமா என்னால பேச முடியல.. ED ரெய்டு குறித்து அமீர் விளக்கம்...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை டெல்லி போதைப் பொருள் கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை திரைப்படத்தில் முதலீடு செய்ததாக தகவல் வெளியானது. 

இதற்கிடையில் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக்குடன் இணைந்து தயாரித்து வந்தார். அவர் கைதானதை தொடர்ந்து இறைவன் மிகப்பெரியவன் படத்தை ஜாபர் சாதிக்குடன் இணைந்து தயாரிப்பதில்லை என்று அறிக்கை ஒன்றை அமீர் வெளியிட்டார். 

திரைப்படம் மட்டுமின்றி உணவகம் போன்ற தொழில்களிலும் ஜாபர் சாதிக்குடன் இயக்குநர் அமீர் பங்குதாரராக இருந்தார். இதையடுத்து  என்சிபி அதிகாரிகள் இயக்குநர் அமீர் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர். 

இதனையடுத்து கடந்த 2ஆம் தேதி டெல்லியில் உள்ள என்சிபி அலுவலகத்தில் ஆஜரான அமீரிடம் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது கடந்த 3 ஆண்டுகளாக பயன்படுத்திய வங்கி கணக்குகள், குடும்பத்தினர் பெயரில் வாங்கிய சொத்துகள், ஜாபர் சாதிக்குடன் தொழில் பார்ட்னராக இணைந்ததற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில் சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கு வீடு, இயக்குநர் அமீரின் வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையானது நள்ளிரவு வரை நீடித்தது. அப்போது என்ன ஆவணங்களை கைப்பற்றினர் என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு ரம்ஜான் தொழுகையில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை 11 மணி நேரம் சோதனை நடத்தியது. சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். என்ன ஆவணங்கள் என்று அவர்கள் தான் சொல்வார்கள்.

எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன் என்றே தொடக்க காலத்தில் இருந்து சொல்லி வருகிறேன். சமூக வலைத்தளங்களில் என் மீது சுமத்தப்படும் எந்த குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை நிரூபிப்பேன். எப்போதும் என்னிடமிருந்து வரும் ஒரே வார்த்தை - இறைவன் மிகப்பெரியவன்

உள்நோக்கத்துடன் சோதனை செய்தார்களா என்பதை நான் உறுதியாக சொல்ல முடியாது. ஒருநாள் நிச்சயம் இதுகுறித்து பேசுவேன். விசாரணை முழுமையாக முடிவடையாததால், அதைப்பற்றி பேசி மேலும் சிக்கலாக்கி கொள்ள கூடாது. என்னால் ஒரு மாதமாக பேச முடியவில்லை என்பது மட்டும் உண்மை. விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால், விசாரணை நடத்துவதற்கு பின்னால் அழுத்தம் உள்ளதா என எனக்கு தெரியாது என்று இயக்குநர் அமீர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow