சென்னை நகருக்குள் அரசு சட்டக் கல்லூரி.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Mar 21, 2024 - 18:31
சென்னை நகருக்குள் அரசு சட்டக் கல்லூரி.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை அரசு சட்டக் கல்லூரியை நகருக்குள் அமைக்கும் வகையில் உரிய இடத்தை  தேர்வு செய்வது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இரண்டாக பிரிக்கப்பட்டு, அதே பெயரில், திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் கிராமத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கிராமத்திலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை சட்டக் கல்லூரி 1891ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கல்லூரியை மூடக்கூடாது என்றும், அதை புதுப்பித்து, கல்லூரியை அதே இடத்தில் அமைக்க வேண்டுமென மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. விசாரணையில் குறுக்கிட்ட நீதிபதிகள், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என பெயர் வைத்துவிட்டு, அதை இரண்டாக பிரித்து இரு மாவட்டங்களில் வைத்துள்ளதால், சட்டக் கல்லூரி மாணவர்கள் பயிற்சிக்கு வந்துசெல்வதும், மூத்த வழக்கறிஞர்களின்  விரிவுரைகளை  கேட்கவும் முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

அதனால், சென்னை நகருக்குள் அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தை  தேர்வு செய்வது குறித்து விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow