மீண்டும் சம்மனை நிராகரித்த மஹுவா மொய்த்ரா....அடுத்த கட்ட நடவடிக்கையில் அமலாக்கத்துறை...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை மஹுவா மொய்த்ரா 3-வது முறையாக நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப தொழிலபதிர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, மஹுவா மொய்த்ரா வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக கூறி சிபிஐ அளித்த பரிந்துரையை ஏற்று அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த பிப்ரவரி பிப்ரவரி 19 மற்றும் மார்ச் 11 ஆகிய தேதிகளில் ஆஜராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை மஹுவா மொய்த்ரா நிராகரித்தார். இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட மஹுவா மொய்த்ராவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் இன்று (28-03-2024) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனையும் மஹுவா மொய்த்ரா நிராகரித்துள்ளார். கிருஷ்ணாநகர் தொகுதியில் பிரசாரம் செய்யப்போவதாகக் கூறி, சம்மனை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?