மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் தரப்போறீங்களா.. இதை கட்டாயம் நோட் பண்ணுங்க
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விரும்பும் நபர்கள் உணவுப் பாதுகாப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியா விடையுடன் எழுந்தருளி அருள்பாலிப்பார். மீனாட்சி அம்மனுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி பட்டாபிஷேகமும், ஏப்ரல் 20 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் தேதி மாசி வீதிகளில் திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
இதேபோல் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அழகர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 21ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் கண்டாங்கி சேலை கட்டி சுந்தர்ராஜ பெருமாள் தங்க பல்லாக்கில் மதுரைக்கு புறப்பாடாகிறார். அப்பன் திருப்பதி, பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி என வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
ஏப்ரல் 22ஆம் தேதி அதிகாலையில் மதுரை மூன்று மாவடி பகுதியில் எதிர்சேவை நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கிறார்கள். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி கோவிந்தா.. கோவிந்தா என்று முழக்கமிட்டு எதிர்கொண்டு அழைப்பார்கள். ஏப்ரல் 23ஆம் தேதி காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
மதுரை குலுங்க குலுங்க சித்திரை திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோடை காலம் வெயில் சுட்டெரிக்கும் என்றாலும் மீனாட்சி சுந்தரரேஸ்வரரை தரிசிக்கவும் வைகையில் இறங்கும் கள்ளழகரை காணவும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள். அப்போது ஏராளமானோர் பக்தர்களுக்கு நீர், மோர், தண்ணீர், சர்பத் வழங்குவார்கள். இந்நிலையில் உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடு மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் பெற்றால் மட்டுமே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முடியும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், உணவுகள், குளிர்பானங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் செயற்கை சாயங்கள் சேர்க்கக்கூடாது. உணவு, உணவுப் பொருட்கள் தொடர்பாக 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?