ஐபிஎஸ் ஆக ஆசைப்பட்ட நதியா.. என்சிசி கேம்பிற்கு போக முடியாத வேதனை.. அவசரத்தில் எடுத்த விபரீத முடிவு
நாட்றம்பள்ளி அருகே கல்லூரி மாணவி துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழரசு. சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது செல்ல மகள் நதியா.
திருப்பத்தூர் பகுதியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் நதியா முதலாம் ஆண்டு படித்து வந்தார். சேலத்தில் நடக்கும் என்சிசி கேம்பிற்கு செல்ல வேண்டுமென தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டார். அதற்கு பெற்றோர்கள் மறுத்தனர்.
இதனால் மனமுடைந்த சேலத்திற்கு செல்ல முடியவில்லையே என்ற கோபத்தில் வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என குறிக்கோளாக தனது மகள் படித்து வந்ததாகவும்,ஆத்திரத்தில் செய்வதறியாது தற்கொலை செய்து கொண்டதையும் கூறி பெற்றோர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.
தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
What's Your Reaction?