தமிழ்நாட்டை சுரண்ட திமுக... நாட்டை சுரண்ட இண்டியா கூட்டணி... பிரதமர் மோடி விளாசல்!
திமுக தமிழ்நாட்டை சுரண்டுவது போல, காங்கிரஸ் இண்டியா கூட்டணியை அமைத்து நாட்டை கொள்ளையடிக்க முயற்சிப்பதாக திருப்பூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கிய என் மண் என் மக்கள் நடைபயணத்தின் இறுதி நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, 2024-ல் தமிழ்நாடு ஒரு புதிய வரலாற்றை எழுத உள்ளது. அதன் முன்னோட்டமே என் மண் என் மக்கள் யாத்திரை என்று பேசினார். அதற்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த ஆதரவு அற்புதமானது என்று தெரிவித்தார்.
என் மண் என் மக்கள் யாத்திரை பாஜகவுடன் தமிழ் மக்கள் கொண்டுள்ள உறவைக் காட்டுவதாக தெரிவித்த அவர், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கட்சிக் கொள்கையை மக்கள் வீடுகளில் கொண்டு சேர்த்ததற்காக அண்ணாமலைக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டுடனான என் நேசம் வெறும் அரசியலுக்கானது இல்லை என்றும், அது இதயத்தில் இருந்து வருவது என்றும் மோடி பேசினார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லை என்றாலும் மக்கள் இதயத்தில் உள்ளது என்று கூறினார். இதைப் பார்த்து தமிழ் மக்களைத் திருட நினைப்பவர்கள் பயப்படுகிறார்கள் என்று கூறிய அவர், முந்தைய ஆட்சியில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது, மத்தியில் பெரிய அமைச்சர் பதவிகளைத் தங்களுக்காக பெற்றுக் கொண்டார்களே அன்றி, தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
உரையின்போது எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, குடும்ப அரசியலை எதிர்த்து மக்களுக்காக அரசியல் செய்த எம்.ஜி.ஆர் ஆண்ட தமிழ்நாட்டில் தற்போது குடும்ப ஆட்சி நடப்பது அவருக்கு அவமானமானது என்றார். மேலும், எம்.ஜி.ஆரின் சித்தாந்தத்தின் படி நடந்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் ஜெயலலிதா என்றும் புகழாரம் சூட்டினார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இண்டியா கூட்டணி தோல்வி அடைந்துவிட்டது என்று கூறிய பிரதமர் மோடி, தற்போது அவர்கள் திமுகவுடன் சேர்ந்து தமிழ்நாட்டைக் கொள்ளை அடிப்பதற்கான உரிமத்தைப் பெறத் துடிக்கிறார்கள் என்று பேசினார். திமுக தமிழ்நாட்டை சுரண்டுவது போல, காங்கிரஸ் இண்டியா கூட்டணியை அமைத்து நாட்டை கொள்ளையடிக்க முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மேலும் இண்டியா கூட்டணிக்கு பூட்டு போட வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசினார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் சேர்த்தே பிரதமர் பணியாற்றி வருவதாக பேசிய அவர், 3.5 கோடி மக்களுக்கு இலவச அரிசி, 40 லட்சம் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு, 6 லட்சம் பேருக்கு வீடுகள் உள்ளிட்டவையே மோடியின் வாக்குறுதி என்று கூறினார். நாட்டில் பாதுகாப்பு தளவாடங்கள் அமைந்துள்ள இரண்டு இடங்களில் தமிழ்நாட்டையும் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று பேசிய அவர், அதன் மூலம் வேலை வாய்ப்புகளை பாஜக அரசு வழங்குவதாகவும், மக்களுக்கு மோடி தரும் உத்தரவாதங்களின் சாட்சியாகவே தாம் நின்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.
What's Your Reaction?