பரந்தூர் புதிய விமான நிலையம்... நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு - ஆட்சேபனை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம்
தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரந்துாரில் அமைய உள்ள, சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரு தாலுகாக்களில், 5,000 ஏக்கர் பரப்பளவில், பரந்துாரைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் அமைய உள்ளது. இதில் 13 கிராமங்களில் விமான நிலைய திட்டமும், பிற கிராமங்களில் அணுகு சாலைகளும் அமைய உள்ளன.
பரந்துாரில் விமான நிலையம் அமைவதாக, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானதில் இருந்து, இத்திட்டத்தை எதிர்த்து ஓராண்டுக்கு மேலாக, ஏகனாபுரம் கிராமத்தினர் தொடர்ந்து பல கட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதிய விமான நிலையத்திற்கான நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு வெளியிட்டது. இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
நில உரிமையாளர்கள், தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமைவெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 3, ஆர் ஆர் கார்டன், பரந்தூர் சாலை கற்பூரம் கம்பெனி அருகில், அங்காள பரமேஸ்வரி கோயில் பின்புறம், பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து ஆட்சேபனைகள் மீது, வரும் ஏப்ரல் 4ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
What's Your Reaction?