திருப்போரூர் கந்தசாமி கோயில் உற்சவர் தேரோட்டம்... திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்...
முருகப்பெருமானுக்கு பட்டு, வேட்டி உடுத்தி, 30 கிலோ எடையிலான மாலை அணிவித்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி உற்சவர் தேரை பட்டாசு வெடித்து, மேளதாளத்துடன் மக்கள் வரவேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான 8 ஆம் நாள் பரிவேட்டை நிகழ்வு நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் அமர்ந்து ஆலத்தூர், தண்டலம், மேட்டுதண்டலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பட்டியலின மக்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், திருப்போரூர் கந்தசாமி உற்சவர் தேர் 400 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக பட்டியலின பகுதி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றது. கந்தசாமி உற்சவர் தேரை பட்டியலினப் பகுதி மக்கள் மலர் தூவியும், பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் வரவேற்றனர். பின்னர் அம்மக்கள் நாதஸ்வரம் முழங்க தாய் வீட்டு சீர்வரிசை எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு பட்டு, வேட்டி உடுத்தி, 30 கிலோ எடையிலான மாலை அணிவித்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
What's Your Reaction?