கோயில்களில் G-Pay வைத்து காணிக்கை வசூல்..! - நீதிமன்றம் புதிய உத்தரவு..!
கரூரில் கோயிலில் G-Pay QR வைத்து பணம் வசூல் செய்த விவகாரத்தில் அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோயில்கள் அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. குறிப்பாக வரதராஜ பெருமாள் கோவில், புஷ்பநாத சுவாமி கோவில், கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவில், மகாபலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.
ஆனாலும், கோயில் பரமாரிப்புக்குப் போதிய நிதி இல்லை என்று கூறி, தனி நபர்கள் கோயில்களுக்குள் உண்டியல் வைத்தும், GPay QR மூலமும் வசூல் செய்துள்ளனர். இதுகுறித்து, கரூர் மாவட்ட காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் ராமகிருஷ்ணன் என்பவர் கோயில்களில் G Pay வைத்து பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில்களில் GPay வைக்கப்பட்டது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கு மனுதாரர் தரப்பில், கோயில்களில் குபேர உண்டியல், தாய் சமர்ப்பணம் என்பது உட்பட பல பெயர்களில் உண்டியல் வைத்து முறைகேடு நடப்பதாகக் குற்றம்சாட்டினார். காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, கோயிலில் தனிநபர் உண்டியல் வைத்து வசூலிப்பது குறித்து விரிவான அறிக்கையை நாளை (பிப். 27-ம் தேதி) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
What's Your Reaction?