"அரசை விமர்சிக்க மக்களுக்கு உரிமை உள்ளது" ஜம்முகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விமர்சன வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் தனது வாட்சப்பில் (ஆர்டிகல் 370) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டம் ரத்து செய்யப்பட்ட தினத்தை கறுப்பு தினம் எனக்குறிப்பிட்டு ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்
குடிமக்களுக்கு அரசின் நடவடிக்கைகள் மீது கருத்து வேறுபாடுகளை தெரிவிக்க உரிமை உண்டு எனக்கூறி, ஜம்முகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை விமர்சித்து ஜாமீனில் வெளியான பேராசியரை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் கல்லூரியில் ஜாவெத் அகமது ஹஜாம் என்ற காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் தனது வாட்சப்பில் (ஆர்டிகல் 370) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டம் ரத்து செய்யப்பட்ட தினத்தை கறுப்பு தினம் எனக்குறிப்பிட்டு ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். இந்த தகவல் குறித்து சக மாணவர்களும், பேராசிரியர்களும் போலீசில் புகாரளிக்க அவர் மீது, இந்திய தண்டனை சட்டம் 153ன் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். இதனை எதிர்த்து காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அபய்.எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் வந்தது. அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஜனநாயகம் ஒரு அத்தியாவசியம் என்றும், அது இல்லையென்றால் அரசியலமைப்பு பிழைக்காது எனவும் கூறினர். அத்துடன் நமது காவல்துறையினர் அரசியலமைப்பில் உள்ள ஜனநாயகத்தை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டத்தை விமர்சிப்பதையும், பாகிஸ்தானின் சுதந்திரதினத்தை கொண்டாடுவதையும் ஒரு குற்றமாக கருதினால் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என கருத்து தெரிவித்தனர்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாளை கருப்பு தினம் என விவரிப்பது எதிர்ப்பு மற்றும் வேதனையின் வெளிப்பாடாகும் எனவும் நீதிபதிகள் கூறினர். குடிமக்களுக்கு அரசின் நடவடிக்கைகள் மீது கருத்து வேறுபாடுகளை தெரிவிக்க உரிமை உரிமை உண்டு எனவும் கூறினர். இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டின் முக்கியத்துவத்தை மேலும் தெளிவுபடுத்துவதாகக் கூறினர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாளை கறுப்பு நாள் என்று சொல்வது வெறுப்பைத் தூண்டும் முயற்சியாக இல்லாமல், எதிர்ப்பு மற்றும் வேதனையின் வெளிப்பாடாக நீதிமன்றத்தால் பார்க்கப்படுகிறது என நீதிபதிகள் கூறினர். பின்னர் ஜாவெத் மீதான வழக்கையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
What's Your Reaction?