எல்.பி.ஜி சிலிண்டர் விலையில் ரூ.100 தள்ளுபடி... மகளிர் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி அறிவிப்பு...
மகளிர் தினத்தையொட்டி, எல்பிஜி சிலிண்டர் விலையில் 100 ரூபாய் தள்ளுபடி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எரிவாயு சிலிண்டர் விலையானது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 1-ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்தது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, ரூ.23.50 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.1,960.50 ஆக விற்பனையாகி வருகிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமுமின்றி ரூ.918.50 காசுகளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் ரூ.100 தள்ளுபடி செய்ய முடிவெடுத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், " இந்த தள்ளுபடி பெண் சக்தியின் வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமின்றி கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையையும் குறைக்கும். இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் உதவியாக இருக்கும், இது முழு குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்" என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?