தென்மாவட்டங்களில் மீட்புப் பணிகள்- கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமனம்

தென் மாவட்டங்களில் அரசு இயந்திரங்கள் முழுமையாக குவிக்கப்பட்டுள்ளது

Dec 18, 2023 - 14:39
Dec 18, 2023 - 15:59
தென்மாவட்டங்களில் மீட்புப் பணிகள்- கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமனம்

தென்மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள கூடுதலாக  4 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான வீடுகள், அலுவலகங்களில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீரில் மூழ்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீரில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்புப்படையினர் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களாக உணவு, பால் போன்றவை தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தெரிவித்தார்.அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கன்னியாகுமரியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.மீட்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கனமழை வெள்ள காரணமாக விளாத்திக்குளம்- தூத்துக்குடி சாலை இன்று காலை துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் பல கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இதேப்போல் பல்வேறு சாலைகள், ரயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் 6,000 போலீசார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 35 தேசிய மற்றும் மாநில பேரிடர் குழுக்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கோவையில் இன்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”மழை வெள்ள பாதிப்பில் இருந்து தென் மாவட்ட மக்களை காப்போம். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மேலும், சென்னை அனுபவத்தை வைத்து தென் மாவட்டங்களில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.தென் மாவட்டங்களில் அரசு இயந்திரங்கள் முழுமையாக குவிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாக” தெரிவித்தார்.

இந்த நிலையில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இடங்களில் மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அமைச்சர் மனோ தங்கராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன் உள்ளிட்ட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow