பைலட்கள் பற்றாக்குறை : 39 இண்டிகோ விமானங்கள் ரத்து : பயணிகள் கடும் அவதி
பைலட்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக 39 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் டிக்கெட் பதிவு செய்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 39 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீபகாலமாக தற்போது சிக்கல்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1,232 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. இதில் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 755 விமானங்களும், வான் போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக 92 விமானங்களும், விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் 258 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் இண்டிகோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை சுமார் 12 மணி நேரத்தில் மட்டும் 39 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பைலட்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.
What's Your Reaction?

