தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது ? 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம் : டிசம்பர் 16-ல் தமிழக வாக்காளர் பட்டியல்
அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. 16வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2026-ம் ஆண்டு மே 10-ந் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னர் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து, 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தும் அதிகாரிகள் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் உதவி அதிகாரிகள் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 2 முதல் 4 பேர் வரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, முதல்வர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக, கலால் துறையின் சேப்பாக்கம் பகுதி இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் அதிகாரியாக தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் பொது மேலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியின் தேர்தல் அதிகாரியாக சேலம் கலால் துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் லோக்கல் விடுறை, பண்டிகை, திருவிழா உள்ளிடவை தொடர்பான பட்டியலை தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரியிடம் கேட்டு பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
டிச 16-ல் தமிழக வாக்காளர் பட்டியல் வெளியீடு
'தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 16ம் தேதி வெளியிடப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியில், கணக்கெடுப்பு பணி, வரும் 11ம் தேதி நிறைவடையும். வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 16ம் தேதி வெளியிடப்படும். திரும்ப பெறப்படாத கணக்கீட்டு படிவங்களின் பட்டியல், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு செய்தவர்கள் போன்ற காரணங்களுடன், வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பட்டியல், வரும் 11ம் தேதிக்கு பின் இறுதி செய்யப்படும். எனவே, வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை விரைவாக சமர்ப்பிக்க வேண்டும். டிச.,16ம் தேதி முதல் ஜன.,15 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம்.எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாத வகையிலும், எந்த ஒரு தகுதியற்றவரும் சேர்க்கப்படாத வகையிலும், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?

