பிரதமர் மோடி பொங்கல் விழா: பராசக்தி படக்குழு பங்கேற்பு
டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல்விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பொங்கல் பண்டிகையை நாளை தமிழர்கள் கோலகலமாக கொண்டாட உள்ளனர். இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை விழா கடந்த சில நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் டெல்லி இல்லத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. எல்.முருகன் இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கன்றுகளுக்கு உணவு வழங்கினார். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: "பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழா. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது."சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தான் பொங்கல் பண்டிகை. இதையொட்டி அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." ஆயிரம் ஆண்டுக்கு முன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதார பண்டிகை இது," என பேசினார்.
இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல், சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கெனிஷா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது.
What's Your Reaction?

