திருப்பரங்குன்றம் தீப வழக்கு: "தனி நீதிபதி உத்தரவால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை"- தமிழக அரசு கடும் வாதம்!

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: "தனி நீதிபதி உத்தரவால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை"- தமிழக அரசு கடும் வாதம்!
Thiruparankundram Deepam case

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் ஏற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இரு நீதிபதிகள் அமர்வில் நடைபெற்று வருகிறது.

தனி நீதிபதி உத்தரவும் குழப்பமும்

ராம. ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், மலை உச்சியில் தீபத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவைக் கோயில் நிர்வாகம் அமல்படுத்தாததால், நேற்று மாலையே சி.ஐ.எஸ்.எஃப். (CISF) வீரர்களின் பாதுகாப்போடு மலையில் உள்ள தீபத் தூணில் தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டார். இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் கூடியிருந்த இந்து அமைப்பினர் காவல்துறையின் தடுப்புகளை மீறி மலையேற முயற்சித்தித்ததால், அசாதாரணச் சூழல் உருவாகி மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

தமிழக அரசின் முக்கிய வாதங்கள்

ஒரு நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இரு நீதிபதிகள் அமர்வில் தொடங்கியது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “திருப்பரங்குன்றத்தில் மதப் பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது. நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு மனுதாரர் தரப்பு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தடுப்புகள் உடைக்கப்பட்டுள்ளன, இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளனர்,” எனத் தெரிவித்தார்.

சட்ட விதிகள் குறித்த அரசின் விளக்கம்

அரசுத் தரப்பு மேலும் வாதிடுகையில், "தனி நீதிபதி உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கப் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் நீதிமன்றப் பாதுகாப்புக்காக உள்ளவர்கள். அவர்களின் அதிகார வரம்பு நீதிமன்றத்துக்குள் மட்டுமே. அவர்களை மனுதாரரின் பாதுகாப்புக்காக அனுப்பியது தவறு," என்று சுட்டிக்காட்டியது. அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், உத்தரவை நிறைவேற்றப்படாதது ஏன்? அதற்கான விளக்கத்தை மட்டுமே கேட்க முடியும். ஆனால், அவமதிப்பு வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், சட்டத்தை மீறித் தனி நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார் என்றும் அரசுத் தரப்பு தெரிவித்தது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக நீதிபதிகளின் கேள்விக்கு, கலவரத்தைத் தடுப்பதற்காகவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு பதிலளித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow