சென்னை காசிமேடு பைபர் படகு மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
ஜனவரி 29ஆம் தேதி காசிமேட்டைச் சேர்ந்த மனோகர் இரண்டு இஞ்சின் பைபர் படகில் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ராட்சத அலையின் காரணமாக பைபர் படகுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. படகிலிருந்த மீனவர்கள் தங்களுடைய உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள மீனவருடைய உதவி வயர்லெஸ் மூலமாக தங்களைக் காப்பாற்றுமாறு மீன்வளத்துறைக்குத் தொடர்பு கொடுத்தும் எந்தவிதமான உதவியும் மீன்வளத்துறையினர் செய்யாததால் அருகாமையிலிருந்த சக மீனவர்கள் படகிலிருந்த ஆறு மீனவர்களையும் காப்பாற்றியுள்ளனர்.
இதனை அடுத்துப் பாதிப்புக்குள்ளான மீனவர் மனோகருக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரை கடலுக்குச் சென்று மீன் பிடி தொழிலைச் செய்ய மாட்டோம் என மீனவர் சங்கத்தினர் கால வரையற்ற போராட்டத்தினை அறிவித்துள்ளனர். இதுகுறித்து மீனவர் சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், சென்னை காசிமேடு கடலில் 150 பைபர் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை அறிவித்திருக்கிறோம். இதன் மூலம் இன்று முதல் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடலில் உள்ள ராட்சத அலை ஏற்படும் பொழுது மீனவர்கள் மற்றும் அவர்களது உடைமைகளைக் காப்பாற்ற நடந்த காலகட்டத்தில் முத்து, பவளம், நீலம் வலம்புரி என்கிற பெரிய விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அது தற்பொழுது சென்னையில் இல்லை. ஆதலால் பெரிய இழப்பு மனோகர் மீனவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. 1983 காலகட்டத்தில் கடலில் கப்பல் மூழ்கினால் 75 லட்சம் இழப்பீடு இருந்தது. அதனையே 2024 காலகட்டத்திலும் தருவோம் என்று தமிழக அரசு சொல்வது ஏற்புடையது இல்லை.
மீனவர்கள் கடலில் தவிர்த்த பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்துக் கரை திரும்பினாலும் அவர்களை மீன்வளத் துறையினர், உயர் அதிகாரிகளும், மீன்வளத்துறை அமைச்சரும் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரும் யாரும் தங்களை வந்து பார்வையிடாதது வருத்தம் அளிப்பதாகவும் தமிழக அரசு உரிய நிவாரணம் பாதிக்கப்பட்ட மீனவர் மனோகருக்கு வழங்கும் வரை உங்களுடைய போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார். அதே வேளையில் தற்பொழுது உள்ள நாட்டுப் படகுகளின் நீளம் 15 மீட்டர் இருக்கிறது, அதனை 18 மீட்டர் நீளமாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் ஏனெனில் அப்பொழுது தான் இயற்கை சீற்றங்களிலிருந்து படகுகளையும் மீனவர்களையும் காப்பாற்ற முடியும் எனக் கூறினார்.