ஃபார்முலா-4 கார் பந்தயம்! எப்போது தெரியுமா?  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன தகவல்..!

ஜூன் மாதத்திற்குப் பிறகு கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Feb 13, 2024 - 12:56
Feb 13, 2024 - 13:16
ஃபார்முலா-4 கார் பந்தயம்! எப்போது தெரியுமா?  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன தகவல்..!

சென்னை தீவுத்திடலைச் சுற்றி, நடத்த திட்டமிட்டிருந்த பார்முலா-4 கார் பந்தயம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் மாதத்திற்கு பின் மீண்டும் பந்தயம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில்  ஃபார்முலா கார் பந்தயங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்திய கார் பந்தய ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, சென்னையில் முதன்முறையாக ஃபார்முலா-4 இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தயத்தை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி மூன்றரை கிலோ மீட்டர் சுற்றளவில் சாலைகளை தயார் செய்து, டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இரவுப் போட்டியாக கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த போட்டிக்காக சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல், அண்ணாசாலை பகுதி மற்றும் நேப்பியர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதைகள்,  தடுப்புகள் மற்றும் சாலைகள் அகற்றப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. 

இதற்காக முதற்கட்டமாக 41 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், போட்டிக்காக நன்றாக உள்ள சாலைகளை சேதப்படுத்துவதாகவும், தடுப்புகளை அகற்றுவதால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் ஏற்படும் எனவும் பல்வேறு தரப்பினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு, சட்ட அனுமதின்றி நடத்தப்படும் இந்த பந்தயத்தால் அரசுக்கு எந்தப் பலனும் இல்லை - பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இதற்கிடையே சென்னையில் மிக்ஜாம் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதால் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கார் பந்தயம் நடத்துவது குறித்து அரசின் நிலைபாடு என்ன என அரசுத்தரப்பிடம் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மழை, வெள்ளம் காரணமாக கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டதாகவும், ஜூன் மாதத்திற்குப் பிறகு கார் பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளதாகவும், ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து 16ம் தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow