பியூஷ் கோயல் நாளை தமிழகம் வருகை: பாஜக தொகுதி எண்ணிக்கை முடிவாக வாய்ப்பு?
சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை நாளை தமிழகம் வரும் பியூஷ் கோயல் முடிவு செய்வார் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைக்கு சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இருகட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை பாஜக தலைமை நியமனம் செய்தத்தது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி, தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஷ் கோயல், அதற்கு அடுத்த ஒரு வாரத்திலேயே சென்னையில் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பியூஷ் கோயில் சந்தித்தார். இதன் நீட்சியாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வந்தார்.
இந்நிலையில் 2 நாள் பயணமாக, வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை வரும் பியூஷ் கோயல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அதிமுக, பாஜக, பாமகவிற்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வரும் 23 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதற்குள், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இணைத்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

