"திமுகவின் சப்பைக்கட்டு நாடகம்.." கடலூர் பெண் கொலை வழக்கு.. அண்ணாமலை விளாசல்!

பொய்யான வழக்குகள் தொடுத்து எங்கள் குரல் வளையை நசுக்கி விடலாம் என்று திமுக பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது- அண்ணாமலை

Apr 23, 2024 - 07:58
Apr 23, 2024 - 08:51
"திமுகவின் சப்பைக்கட்டு நாடகம்.." கடலூர் பெண் கொலை வழக்கு.. அண்ணாமலை விளாசல்!

திமுகவின் பாசிச ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடலூரில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுகவினரை கடுமையாக சாடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த பெண்  கோமதி, மக்களவை தேர்தலில் வாக்களித்து விட்டு வீடு திரும்பியபோது, இரு திமுக பிரமுகர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான போலீஸ் விசாரணையில், கோமதியின் கணவருக்கும், திமுக பிரமுகர்களுக்கும் இருந்த முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் அரங்கேறியதாக போலீசார் தெரிவித்தனர். 

ஆனால், இச்சம்பவத்தை போலீஸ் மாற்றிக்கூறுவதாகவும், பல உண்மைகளையும் மறைப்பதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் பாஜக பிரமுகர் உரையாடும் காட்சி ஒன்றை பகிர்ந்த அண்ணாமலை, திமுகவையும், முதலமைச்சரையும் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன் அந்த வீடியோவில் தாமரை சின்னத்திற்கு வாக்களித்தன் காரணமாகத்தான் இச்சம்பவம் அரங்கேறியிருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 

சகோதரி கோமதி அவர்கள், திமுக கூட்டணி கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்துப் பதிவிட்டதற்கு, என் மீது காவல்துறையினரை ஏவி விட்டு, பாசிச திமுக அரசு ஒரு வழக்கை பதிவு செய்திருப்பதாக அறிகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

திமுக மறைக்கத் துடித்த உண்மை இதோ. பாஜகவுக்கு வாக்களித்த காரணத்திற்காகத்தான், சகோதரி கோமதி அவர்கள் கொலை செய்யப்பட்டார் என்பதை,  அவரது கணவர் திரு.ஜெயக்குமார் மற்றும் அவரது சொந்தங்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். முன்விரோதம் என்பது திமுகவின் சப்பைக்கட்டு நாடகம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது எனவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

ஊழல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களுக்காக நாங்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டங்களுக்கு, என் மீது பல வழக்குகள் தொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே என் மீது இரண்டு வழக்குகள் தொடுத்திருக்கிறார் எனவும் சாடினார். 

இறுதியாக, இவ்வாறு பொய்யான வழக்குகள் தொடுத்து எங்கள் குரல் வளையை நசுக்கி விடலாம் என்று திமுக பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. உங்கள் பாசிச ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம் எனவும் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த கொலை சம்பவம் தொடர்பாக திமுகவின் மீது அவதூறு கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக ஸ்ரீமுஷ்ணம் திமுக நகர இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன் என்பவர் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாமலை மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow