பயனர்களின் நம்பிக்கைக்கு எதிரான பதிவுகள்.. 'X ALGORITHM' குறித்து வெளியான புது ஆய்வு!

சமூக வலைத்தளங்கள் பயனர்களின் நம்பிக்கைகளுக்கும் கருத்துகளுக்கும் எதிரான பதிவுகளையே அல்காரிதம்கள் அதிகம் ஊக்குவிப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

Nov 11, 2026 - 09:28
பயனர்களின் நம்பிக்கைக்கு எதிரான பதிவுகள்.. 'X ALGORITHM' குறித்து வெளியான புது ஆய்வு!

சமூக வலைத்தளங்கள் பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே பதிவுகளைக் காட்டுவதாகக் கூறிவரும் நிலையில், பயனர்களின் சொந்த நம்பிக்கைகளுக்கும் கருத்துகளுக்கும் எதிரான பதிவுகளையே அல்காரிதம்கள் அதிகம் ஊக்குவிப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 715 எக்ஸ் பயனர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வு விவரங்கள் 'PNAS' (Proceedings of the National Academy of Sciences) என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.

மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் (MIT) சேர்ந்த ஜிவ் எப்ஸ்டீன் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் எஸ். பெர்ன்ஸ்டீன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வை நடத்தியது.

ஆய்வில் பங்கேற்ற பயனர்களின் கணக்குகளில் 'ஃபாலோயிங்' (Following) மற்றும் அல்காரிதம் மூலம் இயங்கும் 'ஃபார் யூ' (For You) ஆகிய இரண்டு பக்கங்களிலும் தோன்றும் பதிவுகள் கவனமாகச் சேகரிக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுடபத்தைப் பயன்படுத்தி, அப்பதிவுகளின் கருத்துகளும் பயனர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளும் ஒப்பிட்டு ஆராயப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவில் இரு பக்கங்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. பயனர்கள் தாங்களாகப் பின் தொடரும் கணக்குகளின் பதிவுகள் (Following) அவர்களின் கருத்துகளோடு ஒத்துப்போயின.

ஆனால், அல்காரிதம் தானாகப் பரிந்துரைக்கும் 'ஃபார் யூ' பக்கத்தில், பயனர்களின் நம்பிக்கைகளுக்கு எதிரான பதிவுகளே அதிகளவில் காட்டப்பட்டன. குறிப்பாகக் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சட்ட திட்டங்கள் சார்ந்த பதிவுகளுக்கு அல்காரிதம் அதிக முன்னுரிமை அளித்ததும், சமூக அக்கறை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பதிவுகளுக்குக் குறைந்த முக்கியத்துவமே தந்ததும் தெரியவந்துள்ளது.

பயனர்கள் தங்களுக்குப் பிடிக்காத அல்லது எதிர்க் கருத்துடைய பதிவுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கவோ, விவாதிக்கவோ அளிக்கும் பதில்களே (Replies) இதற்குக் முக்கியக் காரணமாக அமைகின்றன என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விருப்பம் தெரிவிப்பது (Likes) அல்லது பகிர்வது (Reposts) போன்றவை பயனர்களின் உடன்பாட்டைக் காட்டினாலும், எதிர்ப்பைப் பதிவு செய்ய எழுதப்படும் 'ரிப்ளை'களை அல்காரிதம் ஒரு முக்கிய ஈடுபாடாகக் (Engagement) கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இதனால், பயனருக்கு அந்தப் பொருளில் ஆர்வம் இருப்பதாக தவறாகப் புரிந்துகொண்டு, அதுபோன்ற பல பதிவுகளை அல்காரிதம் மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கிறது.

இந்த ஆய்வு நேரடித் தரவுகளைக் கொண்டு மட்டுமே நடத்தப்பட்டுள்ளதால், எதிர்ப்பதிவுகளுக்கு அளிக்கும் பதில்கள்தான் முழுமையான காரணமா என்பதை உறுதியாகக் கூற கூடுதல் பரிசோதனைகள் தேவை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பயனர்களின் கவனத்தையும் ஈடுபாட்டையும் மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்படும் சமூக வலைத்தள அல்காரிதம்கள், அவர்களின் உண்மை விருப்ப பிரதிபலிப்பாக இருப்பதில்லை என்பதை இந்த ஆய்வு தெளிவாக உணர்த்துகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow