ஈரான் ராணுவதளத்தில் குண்டுவீச்சு.. அமெரிக்கா காரணமா? கொந்தளிப்பில் ஈரான் எடுத்த முடிவு..
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்துக்கு நடுவே ஈராக்கில் உள்ள ஈரான் ராணுவதளத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அமெரிக்காவுக்கு இச்சம்பவத்தில் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிரியாவில் தனது தூதரகம் தாக்கப்பட்டதில் உச்சகட்ட கோவத்தில் இருந்த ஈரான், அடுத்து எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காசாவுக்கு ஈரான் ஆரம்பத்தில் இருந்து ஆதரவு தெரிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் துணைத்தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஏப்ரல் 14ம் தேதி 200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் - ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் உதவியுடன் 99% தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. மறுபுறம் மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்திலும் தெற்கு ஈரானிலும் அமெரிக்காவின் ஆலோசனையை மீறி இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 3ம் உலகப்போர் மூளும் எனவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மத்திய ஈராக்கில் ஈரானுக்கு ஆதரவான துணைப்படைகள் தங்கியிருந்த கால்சோ தளத்தில் நள்ளிரவில் திடீர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ISIS பயங்கரவாத அமைப்பை எதிர்த்துப் போராடும் வகையில், ஈரான் ஷியைட் ஆயுதக்குழுவின் துணைப்படையான ஹஷெட்-அல்-ஷாபி படைக் குழுவினர் அங்கு பணியாற்றி வந்தனர். தற்போது ஈரான் பாதுகாப்புப்படையின் ஒரு பகுதியாகவும் அத்தளம் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. ஆயுதங்களை சேமித்து வைக்கும் கிடங்காகவும் அத்தளம் செயல்பட்டு வந்தது. தொடர்ந்து இந்தத் தளத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்காவே முழுப்பொறுப்பு என ஈரான் கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்தது.
தொடர்ந்து ஈராக்கில் எந்தவித தாக்குதலையும் நடத்தவில்லை என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ட்ரோன்கள் என்பது எங்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் என்றும் இஸ்ரேல் மீண்டும் சாகசத்தில் ஈடுபட விரும்பினால் பதிலடி நினைத்துப்பார்க்க முடியாத அளவில் இருக்கும் எனவும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே அணு ஆயுதத்தை பயன்படுத்தப் போவதில்லை என்ற கொள்கையை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்த நிலையில், புதிய தாக்குதல் இம்முடிவை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அணு ஆயுத சோதனைக்குத் தேவையான உயர் ரக யுரேனிய செறிவூட்டலில் ஈரான் முன்னணியில் இருக்கும் நிலையில், தேவைப்பட்டால் அந்நாடு உடனடியாக அணுஆயுதம் தயாரிக்கவும் முடியும். அணு ஆயுத பாதிப்புக்கு அஞ்சி, இஸ்ரேலுக்கு ஆதரவளித்த போதும் அமெரிக்கா அடக்கி வாசித்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஈரானை அணுஆயுத முடிவுக்குள் தள்ள இஸ்ரேல் - அமெரிக்காவே முதன்மைக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
What's Your Reaction?