வெனிசுலா அதிபர் அவரது மனைவி நாடு கடத்தல் : அமெரிக்கா செயலுக்கு கியூபா, ஈரான் கண்டனம் 

வெனிசுலாவின் பல மாநிலங்களில் பொதுமக்கள் மற்றும் இராணுவ நிறுவல்களை அமெரிக்கா தாக்கியதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தவிர, வெனிசுலா அதிபரும் அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலா நாடு மீதான தாக்குதலுக்கு கியூபா, ஈரான் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

வெனிசுலா அதிபர் அவரது மனைவி நாடு கடத்தல் : அமெரிக்கா செயலுக்கு கியூபா, ஈரான் கண்டனம் 
Venezuela's President and his wife extradited

அமெரிக்கா, வெனிசுலா இருநாடுகள் இடையேயான மோதல் நீண்டகாலமாக நடந்துவரும் சூழலில், அதிகளவில் குற்றவாளிகளையும், போதைப் பொருளையும் அமெரிக்காவிற்கு கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும், அந்த கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். 

தவிர, மதுரோவை தானாக முன்வந்து பதவி விலகுமாறு ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ட்ரம்ப் நிர்வாகம் மதுரோவிற்கு எதிராக அதிக அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. பொருளாதாரத் தடைகளுக்கு அப்பால் இராணுவமும் குவிக்கப்பட்டது.

குறிப்பாக, 15,000க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் கடந்த வாரம் கரீபியன் பகுதியில் நிறுத்தப்பட்டன. இது பல தசாப்தங்களில் கரீபியனில் நிறுத்தப்பட்ட மிகப்பெரிய அமெரிக்க இராணுவ இருப்பு ஆகப் பார்க்கப்பட்டது. இதனால், எந்த நேரத்திலும் போர் ஏற்படும் சூழல் உருவாகும் என உலக நாடுகள் கூறியிருந்தன. இந்த நிலையில், வெனிசுலாவின் பல மாநிலங்களில் பொதுமக்கள் மற்றும் இராணுவ நிறுவல்களை அமெரிக்கா தாக்கியதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

தலைநகர் கராகஸில், இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளது. மிராண்டா, அரகுவா மற்றும் லா குய்ரா மாநிலங்களிலும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க அறிக்கை தெரிவிக்கிறது. இதை, அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெனிசுலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலுக்கு கியூபா, ஈரான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதல் காரணமாக, வெனிசுலாவில் உள்ள கொரியர்களை வெளியேற தென்கொரியா உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow