Premalu Tamil Review: இளமை துள்ளும் கதை… கலர்ஃபுல் மேக்கிங்… பிரேமலு தமிழ் விமர்சனம் இதோ
மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது. தற்போது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியான பிரேமலு படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லென், மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப், ஷி்யாம் மோகன் உட்பட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம் பிரேமலு. அதேபெயரில் தமிழில் டப்பாகி இருக்கிறது. இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
சின்ன சாதாரண கதைதான், இன்ஜினியரிங் படிக்கும்போதே ஹீரோ நஸ்லெனுக்கு காதல் தோல்வி. ஊருக்கு வந்து அப்பாவுக்கு பேக்கரியில் உதவியாக இருக்கிறார். யு.கே போக வேண்டும் என்ற அவரின் கனவு தவிடுபொடியாக, நண்பன் அட்வைஸ்படி ஐதராபாத் வருகிறார். அங்கே கோச்சிங் சென்டரில் படிக்கிறார், பின்னர் வெயிட்டராக வேலை செய்கிறார். ஐதராபாத்தில் ஐடியில் வேலை செய்யும் மமிதாவை திருமண வீட்டில் பார்த்தவுடனே நஸ்லெனுக்கு பிடித்து போகிறது. காதல் வயப்படுகிறார், ஒருதலையாக காதலிக்கிறார்.
அதேசமயம், ஐடி கம்பெனியில் மமிதாவுடன் வேலை செய்யும் ஷியாம் மோகனும் மமிதாவை ஒருதலையாக காதலிக்கிறார். யார் காதல் கனித்தது. என்னென்ன பிரச்னைகள் வந்தன என்பது தான் கதை. ஆரம்பம் முதல் கடைசிவரை கலகலப்பு, காமெடி கலந்து எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து பக்கா திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர். குறிப்பாக, அப்பாவித்தனம் கலந்த வேடத்தில் நடிப்பில் பின்னியிருக்கிறார் ஹீரோ நஸ்லென். அவர் பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரி, இளமையான முகம் பலருக்கு பிடிப்பது நிச்சயம்.
ஐடி பெண்ணாக துறுதுறு வேடத்தில் கலக்கியிக்கிறார் மமிதா பைஜூ. ஹீரோ நண்பராக வரும் சங்கீத்தும் மனதில் நிற்கிறார். இளமை துள்ளும் கதை என்பதால் கல்யாண வீடு, டூர், பப், பார்ட்டி, ஐடி ஆபீஸ் என கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். சின்ன, சின்ன சண்டை, டயலாக், காமெடி கூட ரசிக்க முடிகிறது. தமிழ் டப்பிங் என்பதால் கேரளா வீட்டை சேலம் என்று காண்பிப்பதை ஏற்க முடியவில்லை. பாடல் ஒட்டவில்லை. முதலில் சில நிமிடங்கள் மெதுவாக செல்கிறது. கிளைமாக்ஸ் பல படங்களில் பார்த்து புளித்தது.
ஆனாலும், காமெடி, காதல் கலந்த சீன்கள், நடிகர்களின் பங்களிப்பு, திரைக்கதை விறுவிறுப்பு, இயல்பான காட்சிகள் என பல இடங்களில் கைதட்டல்களை அள்ளுகிறது மஞ்சும்மல் பாய்ஸ். கொஞ்சம் சீரியசான நட்பு பற்றி படம் என்றால், பிரேமலு லைட்டான குறும்புதனங்கள், சுவாரஸ்யம் மிகுந்த நட்பை, காதலை சொல்கிற படம். குழந்தைகள், பெரியவர்களுக்கு அவ்வளவாக பிடிக்குமா என்பது கேள்வி. ஆனால், இளைஞர்கள் பிரேமலுவை கொண்டாடுவது உறுதி.
What's Your Reaction?